இந்தியாவின் சோலார் மின்சக்தி துறையில் மிக முக்கியமான மாற்றம் ஒன்று ஜூன் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இனி வரும் காலங்களில், வீட்டின் மொட்டை மாடிகளில் அமைக்கப்படும் சோலார் மின் திட்டங்கள் மற்றும் வணிக ரீதியான சோலார் திட்டங்களுக்கு, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சோலார் செல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் உதிரிபாகங்களைச் சார்ந்திருப்பதை குறைக்கவும், உள்நாட்டிலேயே சோலார் உதிரிபாகங்களை தயாரிக்கும் கட்டமைப்பை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய விதிமுறையால் சாமானிய மக்கள், சோலார் நிறுவனங்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் மத்தியில் பல்வேறு கவலைகள் எழுந்துள்ளன.
இந்த மாற்றத்தின் உடனடி விளைவாக, சோலார் பேனல்களை நிறுவுவதற்கான செலவு கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, சோலார் பேனல் தயாரிப்புக்குத் தேவையான உதிரிபாகங்களின் பற்றாக்குறை ஏற்படவும், இறக்குமதி செய்யப்பட்ட செல்களை நம்பியிருக்கும் நிறுவனங்கள் நெருக்கடியைச் சந்திக்கவும் இது வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோலார் பேனல் தயாரிப்பின் தொடக்கத்தில் சிலிக்கான் மணல், இங்காட் மற்றும் வேஃபர் எனப் பல நிலைகள் உள்ளன. இவைதான் சோலார் செல்களாக மாற்றப்பட்டு, பின் பேனல்களாக உருவாக்கப்படுகின்றன. ஏற்கெனவே சோலார் மாட்யூல்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்த நிலையில், தற்போது அந்தப் பேனலுக்குள் இருக்கும் செல்லையும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.
இந்த விதிமுறைகள் பிஎம் சூர்ய கர் இலவச மின்சார திட்டம் மற்றும் வணிக ரீதியான திட்டங்களுக்குப் பொருந்தும். கால அவகாசம் கேட்டு சோலார் நிறுவனங்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தும், அரசு அதை மறுத்து, திட்டமிட்டபடி விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு சுமார் 200 ஜிகாவாட் சோலார் பேனல்களை தயாரிக்கும் வசதி இருந்தாலும், சோலார் செல்களைத் தயாரிக்கும் திறன் 30 ஜிகாவாட் மட்டுமே உள்ளது. இந்த இடைவெளிதான் சீன இறக்குமதியைச் சார்ந்திருக்கக் காரணமாக இருந்தது. இப்போது உள்நாட்டிலேயே செல்களைத் தயாரிப்பதன் மூலம், தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி இந்தியா நகர முடியும் என்று அரசு நம்புகிறது.
இந்த மாற்றத்தால் நுகர்வோருக்கு ஏற்படப்போகும் மிகப்பெரிய பாதிப்பு விலை உயர்வுதான். ஒரு கிலோவாட் சோலார் அமைப்பிற்கு சுமார் மூவாயிரம் ரூபாய் வரை செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. அந்த வகையில், ஒரு சாதாரண வீட்டின் ஐந்து கிலோவாட் சோலார் அமைப்பிற்கு சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் வரை கூடுதல் செலவாகும். அரசு மானியம் வழங்கும் திட்டங்களுக்குப் பயன் பெறுவதில் பெரிய மாற்றம் இருக்காது என்றாலும், ஆவணச் சரிபார்ப்புகள் மற்றும் நடைமுறைகள் இனி கடினமாக்கப்படலாம். நீண்ட கால அடிப்படையில் மின்சாரக் கட்டணத்தைச் சேமிக்க சோலார் உதவும் என்றாலும், ஆரம்பகட்ட முதலீடு சாமானியர்களுக்குச் சுமையாக மாறும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தொழில்துறை ஏன் இதைக் கண்டு அஞ்சுகிறது என்றால், இந்தியாவில் சோலார் செல்களுக்கான தேவை 50 ஜிகாவாட்டாக இருக்கும்போது, உள்நாட்டு உற்பத்தி வெறும் 30 ஜிகாவாட் மட்டுமே. இதனால் சந்தையில் கடுமையான தட்டுப்பாடு உருவாக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே சோலார் மாட்யூல்களை மட்டும் தயாரித்து வந்த சிறிய நிறுவனங்கள், இப்போது பெரிய நிறுவனங்களைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறிய நிறுவனங்களின் லாபம் குறையும் அல்லது பல நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய சூழல் ஏற்படலாம். இந்திய சோலார் சந்தையில் பெரிய நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் சூழல் உருவாவதைச் சிறு உற்பத்தியாளர்கள் எதிர்க்கின்றனர்.
இருப்பினும், இந்த மாற்றத்தை வரவேற்கும் தரப்பினரும் உள்ளனர். ஆகஸ்ட் 2025-க்கு முன்னரே ஒப்பந்தம் செய்யப்பட்ட திட்டங்களுக்கு இந்த விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாகப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும், உள்நாட்டு சோலார் தயாரிப்புத் துறை வளர்ச்சி அடைய இத்தகைய தற்காலிக சிரமங்கள் அவசியம் என்றும் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். பல கோடி ரூபாய் முதலீடுகளைப் பாதுகாக்கவும், இந்தியா இந்தத் துறையில் உலக அளவில் வலுவான இடத்தைப் பிடிக்கவும் இத்தகைய கடுமையான கொள்கைகள் மிகவும் அவசியமானது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.