முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தன்னுடைய 92-வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
Published on
Updated on
2 min read

வயது மூப்பு காரணமாக முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங், தீவிர அரசியலில் இருந்து சமீப காலமாக விலகியிருந்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஓய்வில் இருந்து வந்த அவருக்கு, அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில், மன் மோகன் சிங்கிற்கு நேற்று திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் இரவு 8.06 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மன் மோகன் சிங்கின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும், அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர், மருத்துவமனைக்கு விரைந்தனர்.

Bikas Das
Summary

ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அஷோக் கெலாட் உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள், மன் மோகன் சிங் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என, வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதற்கிடையே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்ந்து மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா, மருத்துவமனைக்கு சென்றார். இந்த நிலையில், சரியாக இரவு 9.51 மணியளவில் முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் உயிரிழந்ததாக, எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது. பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மன் மோகன் சிங்கின் மறைவு செய்தியை தொடர்ந்து, கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெறவிருந்த காங்கிரஸ் காரிய கமிட்டியின் 2-ஆம் நாள் கூட்டம் மற்றும் பேரணி ரத்து செய்யப்பட்டது. இதற்காக பெலகாவி சென்றிருந்த ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோா் டெல்லியில் மன்மோகன் சிங் இல்லத்திற்கு சென்றனா்.

Summary

இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து பிரியங்கா காந்தியும், மன் மோகன் சிங் இல்லத்திற்கு விரைந்தார். தொடர்ந்து மன் மோகன் சிங்கின் உடல், பலத்த பாதுகாப்புடன் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், இன்று மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 7 நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வழக்கமான இடங்களில் பறக்கும் தேசியக்கொடி, அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், காங்கிரஸ் கட்சியின் கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று, அக்கட்சி அறிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com