இனி 'Instagram' பார்க்க செல்போன் தேவையில்லை! உங்கள் டிவியிலேயே வருகிறது புதிய வசதி!

'Instagram for TV' என்று அழைக்கப்படும் இந்தப் புதிய வசதியை நவம்பர் 27ஆம் தேதி மெட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Instagram TV app
Instagram TV app
Published on: 
Updated on: 
2 min read

இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல் பார்க்க வேண்டும் என்றால் இதுவரை செல்போனைத் திறந்து பார்த்திருப்போம். நண்பர்கள் பகிரும் வீடியோக்கள், பிடித்த கிரியேட்டர்களின் பதிவுகள், சுவாரஸ்யமான ரீல்ஸ் என அனைத்தையும் சிறிய திரையில்தான் ரசித்து வந்தோம். ஆனால், இனி அந்த அனுபவம் மாறப்போகிறது. வீட்டில் இருக்கும் பெரிய தொலைக்காட்சித் திரையிலேயே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ஸ்டோரீஸ் மற்றும் பிடித்த கிரியேட்டர்களின் வீடியோக்களைப் பார்க்கும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்த உள்ளது.

'Instagram for TV' என்று அழைக்கப்படும் இந்தப் புதிய வசதியை நவம்பர் 27ஆம் தேதி மெட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராம் அனுபவத்தை செல்போனிலிருந்து தொலைக்காட்சிக்கும் விரிவுபடுத்துகிறது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒரே திரையில் வீடியோக்களைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற பயனர்களின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வசதி இந்தியாவில் இன்னும் சில நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் என மெட்டா தெரிவித்துள்ளது. குறிப்பாக Apple TV, Amazon Fire TV மற்றும் Google TV ஆகிய ஆதரவு கொண்ட சாதனங்களில் இதைப் பயன்படுத்த முடியும். அதாவது, இந்த வசதி எல்லா ஸ்மார்ட் டிவிகளிலும் நேரடியாகக் கிடைக்கும் என்று அர்த்தமல்ல. குறிப்பிடப்பட்ட சாதனங்களின் ஆதரவு மற்றும் மென்பொருள் பதிப்பைப் பொறுத்தே பயன்படுத்த முடியும்.

அப்படியானால் இந்த Instagram for TV எப்படி செயல்படும்? முதலில் உங்கள் தொலைக்காட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதரவு கொண்ட Apple TV, Fire TV அல்லது Google TV சாதனத்தில் இன்ஸ்டாகிராம் செயலியை நிறுவ வேண்டும். பின்னர் ஏற்கெனவே பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் உள்நுழையலாம். மேலும், செல்போனில் உள்ள Instagram செயலியின் Settings பகுதியில் இருந்து தொலைக்காட்சி அனுபவத்தையும் அணுகும் வசதியும் வழங்கப்பட உள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் என்னவென்றால், ஒரே தொலைக்காட்சியில் ஐந்து இன்ஸ்டாகிராம் கணக்குகள் வரை இணைக்க முடியும். இதனால் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தமான வீடியோக்களைத் தனித்தனியாகப் பார்க்க முடியும். விரும்பினால், தொலைக்காட்சியில் மட்டும் பயன்படுத்துவதற்காகத் தனியாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கையும் உருவாக்கிக்கொள்ளலாம்.

புதிய வசதியில் முக்கிய இடத்தைப் பிடிக்கப்போவது Reels மற்றும் Stories. தற்போது செல்போனில் செங்குத்தாகக் காணப்படும் குறுகிய வீடியோக்களைத் தொலைக்காட்சித் திரையில் பார்க்க முடியும். அதுமட்டுமல்லாமல், அகலமான திரைக்காக உருவாக்கப்பட்ட Horizontal Reels வீடியோக்களையும் முழுத்திரையில் ரசிக்கலாம். தனிப்பட்ட கணக்குகளுக்குச் சென்று புகைப்படங்கள், பல புகைப்படங்கள் அடங்கிய பதிவுகள் மற்றும் கிரியேட்டர்களின் விவரங்களையும் பார்க்கும் வசதி இருக்கும்.

ஒரே மாதிரியான வீடியோக்களைத் தேடி அலைவதைத் தவிர்க்க, பயனர்களின் விருப்பங்கள், பிரபலமான பதிவுகள் மற்றும் அவர்கள் பின்தொடரும் கணக்குகளின் அடிப்படையில் Reels பல்வேறு சேனல்களாகப் பிரிக்கப்படும். உதாரணமாக, விளையாட்டு வீடியோக்களை விரும்புபவர்களுக்கு விளையாட்டு தொடர்பான பதிவுகளும், பயண வீடியோக்களை விரும்புபவர்களுக்கு சுற்றுலா தொடர்பான பதிவுகளும் பரிந்துரைக்கப்படும். புதிய கிரியேட்டர்களையும் வீடியோக்களையும் தேடுவதற்கான வசதியும் இடம்பெறும்.

செல்போனில் ஒவ்வொரு வீடியோவையும் விரலால் கீழே நகர்த்திப் பார்க்கும் முறைக்கு மாறாக, தொலைக்காட்சியில் ரீல்ஸ் தானாகவே ஒன்றன்பின் ஒன்றாக இயங்கும். தொலைக்காட்சி ரிமோட் மூலம் வீடியோவை இயக்கவும், இடைநிறுத்தவும், அடுத்த பதிவுக்குச் செல்லவும் முடியும். இருப்பினும், தானியங்கி வீடியோ மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வசதி செயலியின் பதிப்பைப் பொறுத்து மாறுபடலாம்.

இதில் 'Friends' என்ற தனிப்பட்ட பகுதியும் இடம்பெறுகிறது. நாம் பின்தொடரும் நண்பர்கள் பகிரும் பதிவுகள், அவர்கள் பார்க்கும் பிரபலமான வீடியோக்கள் போன்றவற்றை ஒரே இடத்தில் கண்டறிய முடியும். செல்போனில் பார்க்கும் ஒரு ரீலைத் தொலைக்காட்சியில் காட்ட விரும்பினால், இரண்டு சாதனங்களும் ஒரே Wi-Fi இணைப்பில் இருக்கும்போது Cast வசதியைப் பயன்படுத்தி வீடியோவை டிவிக்கு அனுப்பலாம்.

குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் பாதுகாப்பிற்கும் மெட்டா சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. தொலைக்காட்சியில் பார்க்கப்படும் ரீல்ஸ் பொதுவாக 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உள்ளடக்கத் தரநிலைகளைப் பின்பற்றும். இளம் வயதினருக்கான கணக்குகளில் அவர்களுக்குப் பொருத்தமற்ற வீடியோக்கள், கருத்துகள் மற்றும் சுயவிவரங்களுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்படும். மேலும், தொலைக்காட்சியில் செலவிடும் நேரமும் அவர்களின் மொத்தப் பயன்பாட்டு நேரக் கணக்கில் சேர்க்கப்படும். தூக்க நேரம் மற்றும் பயன்பாட்டு வரம்புகள் தொடர்பான நினைவூட்டல்களும் வழங்கப்படலாம்.

இந்த அறிவிப்பு நவம்பர் 27ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற மெட்டாவின் வருடாந்திர படைப்பாளர்கள் நிகழ்ச்சியான 'House of Instagram' நிகழ்வில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் இன்ஸ்டாகிராம் இனி செல்போனில் மட்டுமே பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாக இல்லாமல், வீட்டில் குடும்பத்தினருடன் இணைந்து பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு தளமாகவும் வளர மெட்டா திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே தொலைக்காட்சியில் YouTube, Netflix போன்ற சேவைகளைப் பயன்படுத்தி வரும் நிலையில், இன்ஸ்டாகிராமும் பெரிய திரைக்கு வருவது டிஜிட்டல் பொழுதுபோக்குத் துறையில் புதிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரீல்ஸ் உருவாக்கும் கிரியேட்டர்களுக்கு அவர்களின் வீடியோக்கள் தொலைக்காட்சியிலும் பார்வையாளர்களைச் சென்றடையும் புதிய வாய்ப்பை இது உருவாக்கலாம். இந்தியாவில் இந்த வசதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் அடுத்த சில நாட்களில் எந்தெந்த சாதனங்களில் கிடைக்கிறது, பயனர்கள் அதை எவ்வாறு பயன்படுத்தத் தொடங்கலாம் என்பது தெரியவரும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.