பெட்ரோலில் எத்தனால் கலப்பு 30%-ஐ தாண்டுகிறதா? வாகன ஓட்டிகளிடையே எழுந்த சந்தேகம்... உண்மையைத் தேடும் அரசு!

இதன் மூலம் மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் எத்தனால் எந்த அளவுக்குக் கலக்கப்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாகச் சரிபார்க்க முடியும் என்று கேரள அரசு கருதுகிறது
பெட்ரோலில் எத்தனால் கலப்பு 30%-ஐ தாண்டுகிறதா? வாகன ஓட்டிகளிடையே எழுந்த சந்தேகம்... உண்மையைத் தேடும் அரசு!
Published on: 
Updated on: 
2 min read

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோலின் தரம் குறித்து வாகன ஓட்டிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவதால் வாகனங்களின் மைலேஜ் குறைகிறதா, இன்ஜின் பாதிக்கப்படுகிறதா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், பெட்ரோலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எத்தனால் கலக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய 100 சதவீதம் சுத்தமான பெட்ரோல் மாதிரிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதனால் பெட்ரோல் கலப்பு தொடர்பான விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கேரள உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் அனூப் ஜேக்கப், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், எண்ணெய் நிறுவனங்கள் மூலம் கலப்படமில்லாத பெட்ரோல் மாதிரிகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் எத்தனால் எந்த அளவுக்குக் கலக்கப்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாகச் சரிபார்க்க முடியும் என்று கேரள அரசு கருதுகிறது.

உண்மையில் இந்தச் சோதனைக்கான முயற்சி திடீரெனத் தொடங்கப்படவில்லை. பெட்ரோலில் எத்தனால் கலப்பு அளவு அதிகமாக இருப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, கேரள உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாநிலத்தின் பல்வேறு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இருந்து மாதிரிகளைச் சேகரித்தனர். பின்னர் அவை அரசு வேதியியல் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன. பெட்ரோலில் எத்தனால் கலப்பு அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டியுள்ளதா என்பதை ஆய்வு செய்வதே இதன் நோக்கம்.

சேகரிக்கப்பட்ட பெட்ரோல் மாதிரிகளில் உள்ள எத்தனால் அளவை ஒப்பிட்டுச் சரிபார்க்க, 100 சதவீதம் சுத்தமான பெட்ரோல் மாதிரிகள் தேவைப்படுகின்றன. இந்த மாதிரிகள் இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்களிடம் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முதலில் மாதிரிகளை வழங்க ஒப்புக்கொண்ட நிறுவனங்கள், பின்னர் அவற்றை வழங்க மறுத்துவிட்டதாக அமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ஆய்வின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளன.

இந்தப் பிரச்சினை அண்டை மாநிலத்தில் எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகுதான் அதிக கவனம் பெற்றது. கர்நாடக அரசு நடத்தியதாகக் கூறப்படும் ஆய்வில், சில பெட்ரோல் மாதிரிகளில் எத்தனால் அளவு 20 சதவீதத்தைத் தாண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, இந்தியன் ஆயில் பெட்ரோலில் 31.2 சதவீதமும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் பெட்ரோலில் 30.5 சதவீதமும் எத்தனால் இருந்ததாகத் தனியார் ஆய்வக முடிவுகளை மேற்கோள் காட்டி கர்நாடக அரசு கூறியது. ஆனால், இந்த முடிவுகளை மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் ஏற்கவில்லை. மாதிரிகள் சேகரிக்கப்பட்ட விதம் மற்றும் ஆய்வு முறைகள் குறித்து அவை கேள்வி எழுப்பின.

இந்தியாவில் தற்போது E20 என்ற திட்டத்தின் கீழ் பெட்ரோலில் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. பெட்ரோல் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது, விவசாயிகளிடமிருந்து கிடைக்கும் மூலப்பொருட்களைப் பயன்படுத்துவது மற்றும் எரிபொருள் தொடர்பான செலவுகளைக் குறைப்பது போன்ற நோக்கங்களுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் வாகனங்களின் செயல்திறன் மற்றும் எரிபொருள் தரம் குறித்த சந்தேகங்களும் பொதுமக்களிடம் நீடிக்கின்றன.

மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நவம்பர் 7-ம் தேதி வெளியிட்ட தகவலில், 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பரிசோதிக்கப்பட்ட 893 பெட்ரோல் மாதிரிகளும் நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்குள் இருந்ததாகத் தெரிவித்தது. கர்நாடகாவில் பரிசோதிக்கப்பட்ட 56 மாதிரிகளிலும் எத்தனால் அளவு 19 முதல் 20 சதவீதத்திற்குள் இருந்ததாகக் கூறியது. இதனால் இரு தரப்பினரின் ஆய்வு முடிவுகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் மாதிரிகளை முறையான வழிமுறைகளில் சேகரித்து, சுத்தமான பெட்ரோலுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வதுதான் உண்மையைத் தெளிவுபடுத்தும். பொதுமக்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார். எரிபொருளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எத்தனால் கலக்கப்பட்டிருப்பது உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தற்போது அனைவரின் கவனமும் இந்த ஆய்வு எப்போது முழுமையடையும், அதன் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதில்தான் உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.