புதிய கட்சி தொடங்குகிறாரா குலாம் நபி ஆசாத்..? காங்கிரஸில் தொடரும் குழப்பம்...

குலாம் நபி ஆசாத்  புதிய கட்சியைத் தொடங்குவதான தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
புதிய கட்சி தொடங்குகிறாரா குலாம் நபி ஆசாத்..? காங்கிரஸில் தொடரும் குழப்பம்...
Published on
Updated on
2 min read

கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் கட்சியில் உள்ள சில மூத்த தலைவர்கள் கட்சியின் தலைமைக்கு எதிராகவும் கட்சியில் செய்யப்பட வேண்டிய முக்கிய மாற்றங்கள் தொடர்பாகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.  இந்த மூத்த தலைவர்கள் தான் காங்கிரஸ் தலைமை குறித்து சோனியா காந்திக்கும் கடிதம் எழுதியிருந்தனர். இவர்கள் ஜி23 தலைவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 

இந்த ஜி23 தலைவர்களில் முக்கியமானவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் செயல்பாடுகள் குறித்துத் தொடர்ந்து பேசி வரும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட காங்கிரஸ் 2024 தேர்தல் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் எனத் தான் நம்பவில்லை எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியிருந்தார். இந்தச் சூழலில் அவர் கடந்த சில நாட்களாகக் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முக்கிய தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையே அவரது ஆதரவாளர்கள் 20 பேர் தங்கள் பதவிகளையும் ராஜினாமா செய்திருந்தனர்.

இது குலாம் நபி ஆசாத் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக வியூகங்கள் பரவ காரணமாக அமைந்தது. காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குலாம் நபி ஆசாத், அதன் பின்னர் என்டிடிவி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட பிறகு இங்கு அரசியல் செயல்பாடுகளுக்கு எதுவும் இல்லை. அதற்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் தான் இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ஒரு விஷயத்தை மறுக்கும் போது அதைக் கேட்க யாரும் தயாராக இல்லை. எனக்குச் சொந்தக் கட்சியைத் தொடங்கும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை. ஒருவர் எப்போது உயிரிழப்பார் என்பதை எப்படி யாராலும் சொல்ல முடியாதோ அதேபோல அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதையும் யாராலும் சொல்ல முடியாது, ஆனால் இப்போது எனக்குப் புதிதாகக் கட்சியை ஆரம்பிக்கும் எண்ணம் எதுவும் இல்லை. நான் அரசியலில் இருந்து விலகவே விரும்பினேன். இருப்பினும், லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் என்னைத் தொடர்ந்து வலியுறுத்தியதாலேயே தொடர்கிறேன். காஷ்மீர் காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகளுக்குப் புத்துயிர் அளிக்கவே இதுபோன்ற கூட்டங்களை நடத்துகிறேன்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகவே அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லாமல் போகிவிட்டது. கடந்த 2019, ஆகஸ்ட் 5இல் காஷ்மீர் சிறப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்ட போது, அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் நின்று போனது. அரசியல் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதை மீண்டும் தொடங்கவே நான் இப்போது கூட்டங்களை நடத்தி வருகிறேன். என்னைப் பொறுத்தவரை இங்கு அனைவரும் காங்கிரஸ் கட்சியைத் தேர்ந்தவர்கள் தான். நான் காஷ்மீரில் இருக்கும்போது, ​​நான் காங்கிரஸ் கட்சியைப் பற்றியோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினரைப் பற்றியோ பேசுவதில்லை. இங்குச் சிலர் குறைவாக வேலை செய்கிறார்கள். ஆனால் எனக்குக் கடந்த 40 ஆண்டுகளாகவே அதிக வேலை செய்யும் பழக்கம் உள்ளது. இப்போதும் கூட என்னால் ஒரே நாளில் 16 பேரணிகள் நடத்த முடியும்" என்றார். மேலும், தற்போதைய சூழலில் தனக்குக் காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவராகும் விருப்பம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com