
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கான சட்டமன்ற தேர்தலில், ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி, மொத்தமுள்ள 81 இடங்களில் 56 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, தனது முதலமைச்சர் ராஜினாமா செய்த ஹேமந்த் சோரன், அம்மாநில ஆளுநர் சந்தோஷ் குமார் காங்வாரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக்கோரினார். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் 14-வது முதலமைச்சருக்கான பதவியேற்பு விழா, ராஞ்சியில் உள்ள மொரபாதி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக இந்தியா கூட்டணி தலைவர்களான, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர், ராஞ்சிக்கு வருகை தந்தனர். தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் சார்பாக பதவியேற்பு விழாவில் பங்கேற்க, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து மொரபாதி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் 4-வது முறையாக பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் சந்தோஷ் குமார் காங்வார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் இந்தியா கூட்டணி தலைவர்கள் பலரும் ஹேமந்த் சோரனுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த விழாவில் ஹேமந்த் சோரன் மட்டும் பதவியேற்றுக்கொண்ட நிலையில், அமைச்சரவைக்கான பதவியேற்பு பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 41 இடங்களில், ஹேமந்த் சோரனின் கட்சி 34 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதால், கூட்டணி கட்சியான காங்கிரஸும் அமைச்சரவையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.