
கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியிடப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மே 24, 2025 அன்று, சென்னையில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் தனது பேச்சை “உயிரே உறவே தமிழே” என்று தொடங்கினார். இந்த விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரை வரவேற்கும் போது, கமல்ஹாசன், “கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது, எனவே நீங்களும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்” என்று கூறினார். இந்த கருத்து கர்நாடகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. கன்னட மொழிக்கு 2,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ளது என்று கூறி, கன்னட ஆதரவு அமைப்புகள் இந்த பேச்சை கன்னட மொழியையும், கன்னட மக்களின் அடையாளத்தையும் அவமதிக்கும் செயல் என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
கர்நாடகத்தில் எதிர்ப்பு
கமல்ஹாசனின் கருத்துக்கு எதிராக, கர்நாடகத்தில் உள்ள கர்நாடக ரக்ஷண வேதிகே (KRV) உள்ளிட்ட கன்னட ஆதரவு மற்றும் பண்பாட்டு அமைப்புகள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தன. பெலகாவியில் உள்ள INOX திரையரங்கத்துக்கு முன்பு, கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பு போராட்டம் நடத்தியது. ‘தக் லைஃப்’ படத்தின் போஸ்டர்களை கிழித்து, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கர்நாடக மாநில அரசு மற்றும் அரசியல் தலைவர்களும் இந்த விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடு எடுத்தனர். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உள்ளது. கமல்ஹாசனுக்கு இது தெரியவில்லை” என்று கூறி விமர்சித்தார். கர்நாடக கன்னட மற்றும் பண்பாட்டு அமைச்சர் சிவராஜ் தங்கதாகி, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால், ‘தக் லைஃப்’ படத்துக்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை, கமல்ஹாசனின் கருத்துக்கு எதிராக பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, “தன் மொழியை பெருமைப்படுத்துவதற்காக மற்றொரு மொழியை அவமதிப்பது கலாச்சாரமற்ற செயல்” என்று கூறி, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகுமார் கவுடா, “கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) உடனடியாக படத்துக்கு தடை விதிக்க வேண்டும், இல்லையெனில் அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.
கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் முடிவு
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) மே 30, 2025 அன்று, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால், ‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தது. KFCC தலைவர் எம். நரசிம்மலு, “இது ஒரு திரைப்படம் பற்றிய பிரச்சினை அல்ல, மாநிலத்தின் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளம் பற்றியது” என்று கூறினார். மேலும், கர்நாடகாவில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால், படத்தை திரையிட மாட்டோம் என்று முடிவு செய்தனர்.
KFCC முன்னாள் தலைவர் சா.ரா. கோவிந்து, “கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால், கன்னட ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து கடுமையான போராட்டங்களை நடத்துவோம்” என்று எச்சரித்தார். மேலும், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்-ஐ தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்குமாறு கோரியதாகவும், ஆனால் பதில் வரவில்லை என்றும் தெரிவித்தனர்.
கமல்ஹாசனின் பதில்
கமல்ஹாசன் இந்த சர்ச்சைக்கு மே 28, 2025 அன்று விளக்கம் அளித்தார். அதில், “நான் பேசியது அன்பின் காரணமாகவே. பல வரலாற்று ஆய்வாளர்கள் மொழி வரலாறு பற்றி எனக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை” என்று கூறினார். மேலும், “நான் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால் தவறு செய்யவில்லை என்றால் மன்னிப்பு கேட்க மாட்டேன். கர்நாடகம், ஆந்திரா, கேரளா மீது எனக்கு உண்மையான அன்பு உள்ளது. இது ஒரு ஜனநாயக நாடு, நான் சட்டத்தையும் நீதியையும் நம்புகிறேன்” என்று கூறி, மன்னிப்பு கேட்க மறுத்தார்.
மேலும், “அரசியல்வாதிகள், நானும் உட்பட, மொழி பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள்” என்று கூறி, இந்த விவகாரத்தை அரசியலாக்குவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், நேற்று (ஜூன் 2) அன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. இந்த மனு, ‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகாவில் தடையின்றி வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியது. மனுவில், கமல்ஹாசனின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், இது தமிழ் மற்றும் கன்னட மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் கூறப்பட்டது என்றும் வாதிடப்பட்டது.
மேலும், கர்நாடக அரசு, காவல்துறை, மற்றும் திரைப்பட வர்த்தக சபையை, படத்தின் வெளியீட்டை தடுக்க வேண்டாம் என்று கோரியது. திரையரங்குகளில் படத்தை திரையிடுவதற்கு மாநில காவல்துறை மற்றும் நகர காவல் ஆணையர் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்