

கர்நாடக மாநிலம் ஹாவேரி தாலுக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின்வெட்டால், நோயாளிகளுக்கு மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு மருத்துவமனை கட்டிடத்தில் ஏற்பட்ட ஏற்பட்டு வந்த மின்சார கோளாறு காரணமாக திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் மீண்டும் வருவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் மருத்துவமனையில் பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். சிலருக்கு ஊசி செலுத்த வேண்டிய நிலையும், சிலருக்கு காயங்களுக்கு தையல் போட வேண்டிய நிலையும் இருந்தது. ஆனால் மருத்துவமனை முழுவதும் இருளில் மூழ்கியதால், மருத்துவ ஊழியர்கள் தங்களது செல்போன்களில் உள்ள டார்ச்களை பயன்படுத்தி சிகிச்சையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. காயங்களுக்கு தையல் போடுவது உள்ளிட்ட மருத்துவப் பணிகளும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நடைபெற்றதாக நோயாளிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் இருந்த நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் கையில் போன் டார்ச்களை வைத்துக்கொண்டு இருளில் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மருத்துவமனைக்கு முறையான UPS மற்றும் போதுமான மாற்று வசதி இல்லை என்றும், வழக்கமான மின்சார விநியோகத்தையே மருத்துவமனை நம்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுகளின்போது நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகள் மற்றும் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்களுக்கு தடையற்ற மின்சாரம் மிகவும் அவசியம் என நோயாளிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட நேரம் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டால், இதுபோன்ற நோயாளிகளின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படக்கூடும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், மருத்துவமனையில் குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் தடுப்பூசிகள் மற்றும் சில முக்கியமான மருந்துகளும் மின்வெட்டால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட நேரம் சரியான வெப்பநிலையில் பராமரிக்கப்படாவிட்டால், அவற்றின் தரம் பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறியுள்ளனர். மின்வெட்டு தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், மருத்துவ அதிகாரிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று சொல்லபடுகிறது.
மருத்துவமனை போன்ற அவசர சிகிச்சை வழங்கப்படும் இடத்தில், இதுபோன்ற மின்வெட்டு ஏற்பட்டால் உடனடியாக செயல்படும் வகையில் மாற்று மின்சார வசதி இருக்க வேண்டியது அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, மருத்துவமனைக்கு நிரந்தர மின்சார காப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்