பெட்ரோலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக எத்தனால் கலப்பா? ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

அதாவது, ஒரு லிட்டர் பெட்ரோலில் அதிகபட்சமாக 20 சதவீதம் எத்தனால் கலந்திருக்கும்...
E20 Petrol Ethanol Blending Controversy
E20 Petrol Ethanol Blending Controversy
Published on: 
Updated on: 
2 min read

வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோலின் தரம் தொடர்பாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. பெட்ரோலில் 20 சதவீதம் மட்டுமே எத்தனால் கலக்க அனுமதி உள்ள நிலையில், சில பெட்ரோல் நிலையங்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக எத்தனால் கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் வாகனங்களின் செயல்திறன் பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். குறிப்பாக, E20 திட்டம் தற்போது E420 ஆக மாறிவிட்டதா என்று அவர் கேள்வி எழுப்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டம் கடந்த சில ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெட்ரோல் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயை இந்தியா வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. இதற்காகப் பெரும் தொகை செலவிடப்படுகிறது. இந்த இறக்குமதியைக் குறைப்பதுடன், விவசாயப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலின் பயன்பாட்டை அதிகரிப்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் ஒரு பகுதியாக E20 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, ஒரு லிட்டர் பெட்ரோலில் அதிகபட்சமாக 20 சதவீதம் எத்தனால் கலந்திருக்கும். இந்தத் திட்டம் நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எத்தனால் கலந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் இருந்து மொத்தம் 63 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. பெங்களூருவில் உள்ள ஸ்ரீராம் ஆராய்ச்சி நிறுவனம் இந்த மாதிரிகளைப் பரிசோதித்ததாக மாநில உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வில் 14 பெட்ரோல் நிலையங்களின் மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட 20 சதவீத அளவைவிட அதிகமாக எத்தனால் கலந்திருப்பது கண்டறியப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஒரு மாதிரியில் 31.2 சதவீதமும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஒரு மாதிரியில் 30.5 சதவீதமும் எத்தனால் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாரத் பெட்ரோலியம், நயாரா மற்றும் ஷெல் நிறுவனங்களின் சில மாதிரிகளிலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான எத்தனால் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மாதிரிகள் பெங்களூரு, கோலார், சிக்கபள்ளாப்பூர், பெங்களூரு ஊரகம், ராமநகரம், மங்களூரு மற்றும் துமகூரு ஆகிய ஏழு மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. முதலில் சில மாதிரிகள் எண்ணெய் நிறுவனங்களின் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டபோது, எத்தனால் கலவை தொடர்பான விவரங்கள் தெளிவாகக் கிடைக்கவில்லை என்றும், அதனால் சுயாதீன ஆய்வகத்தில் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்பியுள்ளார். E20 என்று அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் E420 ஆக மாறிவிட்டதா என்ற விமர்சனத்தை அவர் முன்வைத்துள்ளார். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எத்தனால் கலக்கப்பட்டால் அதன் பாதிப்பைச் சாதாரண வாகன ஓட்டிகள்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகப்படியான எத்தனால் கலப்பதால் வாகனங்களின் மைலேஜ் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், எரிபொருள் பம்புகள், இன்ஜெக்டர்கள், ரப்பர் குழாய்கள், சீல்கள் போன்ற உதிரிப்பாகங்களிலும் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக E20 எரிபொருளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படாத பழைய வாகனங்களுக்கு இந்தப் பிரச்சினை அதிகமாக இருக்கலாம் என்று கர்நாடக அரசு கவலை தெரிவித்துள்ளது. வாகன உரிமையாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்குவதற்குத் தனி நிதியை உருவாக்க வேண்டும் என்று மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. பெட்ரோல் நிலையங்களில் எத்தனால் கலவை அளவை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்ட விளக்கத்தில், தாங்கள் விற்பனை செய்யும் E20 பெட்ரோல் நிர்ணயிக்கப்பட்ட தரத்துக்கு உட்பட்டதே என்று தெரிவித்துள்ளன. கர்நாடக அரசு மேற்கொண்ட மாதிரிச் சேகரிப்பு மற்றும் ஆய்வு முறைகள் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளன. தங்களது சொந்த ஆய்வுகளின்படி எத்தனால் கலவை 19 முதல் 20 சதவீதத்துக்குள் இருப்பதாகவும் கூறியுள்ளன. இதனால் மாநில அரசின் ஆய்வு முடிவுகளுக்கும் எண்ணெய் நிறுவனங்களின் விளக்கத்துக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ விளக்கமும், மேலதிக ஆய்வு முடிவுகளும் முக்கியமானதாக இருக்கும்.

ஒருபுறம் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் எத்தனால் கலப்புத் திட்டம் உதவுவதாகக் கூறப்படுகிறது. மறுபுறம், நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறி எத்தனால் கலக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சர்ச்சைக்கு உரிய விளக்கம் கிடைப்பதுடன், பெட்ரோலின் தரம் குறித்த நம்பிக்கையும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.