
முல்லை பெரியாறு அணையில் உள்ள பேபி அணையை பலப்படுத்த, அணை அருகே உள்ள 35 மரங்களை வெட்டுவதற்கு, கேரள அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. ஆனால், அதற்கு கேரள அரசு மறுப்பு தெரிவித்தது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் 15 மரங்களை வெட்டுவதற்கு, கேரள தலைமை வன அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். அதற்கான நகல், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே. ஜோஸிடமும் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கேரள அமைச்சர் ஏ.கே.சசீந்திரன், மரங்களை வெட்டுவதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது தங்களுக்கு தெரியாது என்றும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பிய பிறகே தங்களுக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.
முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் அரசு எடுத்த நிலைப்பாட்டை கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பாக அவசர அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த அறிக்கையை பெறுவதற்கு முன்பு உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் முதலமைச்சருடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கேரள அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் கூறியுள்ளார்.