பெட்ரோல் பங்கில் இருந்து போதையிலேயே கிளம்பிய இளைஞர்.. சிக்கிய புதிய வீடியோ ஆதாரம்! பேருந்தில் கருகி இறந்த 19 உயிர்களும் என்ன பாவம் செய்தனர்?

அவர் வாகனம் ஓட்டும்போதே தடுமாறியபடி காணப்படுவதால், அவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பெட்ரோல் பங்கில் இருந்து போதையிலேயே கிளம்பிய இளைஞர்.. சிக்கிய புதிய வீடியோ ஆதாரம்! பேருந்தில் கருகி இறந்த 19 உயிர்களும் என்ன பாவம் செய்தனர்?
Published on
Updated on
2 min read

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்த கோர விபத்தில் சுமார் 19க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த விபத்துக்கான காரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், விபத்துக்குச் சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளியின் அடிப்படையில், விபத்திற்குக் காரணமான இருசக்கர வாகன ஓட்டி, மது போதையில் அபாயகரமாக வண்டியை ஓட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்தக் காணொளியானது, விபத்துக்குள்ளான அந்தப் பகுதியருகே உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காணொளியில் இருக்கும் நபர், இருசக்கர வாகனத்தில் பின்னால் ஒருவரை அமர வைத்திருக்கிறார். அவர் வாகனம் ஓட்டும்போதே தடுமாறியபடி காணப்படுவதால், அவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. போதையின் காரணமாக, அவர் பெட்ரோல் நிலையத்திலேயே வண்டியை மிகவும் அபாயகரமான முறையில் ஓட்டியுள்ளார்.

இந்த இளைஞர் பெட்ரோல் நிலையத்திலிருந்து வெளியேறிய சிறிது நேரத்திலேயே, அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மோதியுள்ளது. இந்த மோதலின் வேகத்தில், அந்த இருசக்கர வாகனம் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டுள்ளது. பேருந்து ஓட்டுநர் மோதலைக் கவனித்தும் வண்டியை நிறுத்தாமல் சில தூரம் இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பேருந்தின் அடியில் சிக்கியிருந்த இருசக்கர வாகனம் இழுத்துச் செல்லப்பட்டபோது ஏற்பட்ட உராய்வு காரணமாகத் தீப்பொறி கிளம்பி, பேருந்து முழுவதும் மளமளவெனத் தீப்பரவியது.

இந்த விபத்தில், பேருந்துக்குள் சிக்கியிருந்த 40 பயணிகளில் சுமார் 19க்கும் மேற்பட்டோர் தீயில் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்திற்குக் காரணமான இருசக்கர வாகன ஓட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பேருந்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியே குதித்தவர்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். பயணிகளைப் பாதுகாக்க வேண்டிய பேருந்து ஓட்டுநர், பேருந்தில் தீப்பிடித்ததைக் கண்டதும், பீதியில் உடனடியாகத் தப்பி ஓடிவிட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது காவல்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வரும் இந்த விபத்து, ஒரு தனிநபரின் பொறுப்பற்ற செயலால் இத்தனை உயிர்கள் பறிபோயுள்ளன என்பதை உணர்த்துகிறது. சாலையில் வாகனங்களை ஓட்டுவோர் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதன் அபாயம் குறித்து இந்தச் சம்பவம் ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com