

இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பத்து மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இதில் பீகார் தேர்தலுக்கு முன்னரே அங்கு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகள் துவங்கியுள்ளன.
வேலைக்காக புலம் பெயர்தல், விரைவான நகரமயமாக்கல், இளைஞர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவது, போலி பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் சேர்க்கப்பட்டது ஆகியவற்றை முறைப்படுத்தவே சிறப்பு வாக்காளர் திருத்தம் கொண்டுவரப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறினாலும், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள், மக்களின் வாக்குரிமையைப் பறிக்க பா.ஜ.கவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாகவே எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
மேலும் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) டிச 1 வரை 77,52529 (12.09 சதவீதம்) வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்கள் திரும்ப வரவில்லை என்ற புள்ளிவிவரத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால தமிழகத்தில் 77 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழக்கலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் எஸ்.ஐ.ஆர் விவகாரம் குறித்து லோக்சபாவில் விவாதம் தொடங்கியது அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “ எஸ்.ஐ.ஆர் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். வாக்கு திருட்டுதான் மிகப்பெரும் தேசவிரோத செயல். தேசப்பிதா காந்தியை RSS கொலை செய்தது.ஆனால் அவர்களின் திட்டம் அத்துடன் முடியவில்லை. நாட்டின் அனைத்து அமைப்புகளையும் கைப்பற்ற துவங்கிவிட்டது. அனைத்து நிறுவனங்களையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றி வருகிறது. இப்போது தேர்தல் ஆணையத்தையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றியுள்ளது. நாட்டின் நிறுவன கட்டமைப்பைக் கைப்பற்றுவதே ஆர்எஸ்எஸ்ஸின் திட்டமாகும். அது இந்த ஜனநாயகத்தை அழிக்க நினைக்கிறது. உளவுத்துறை அமைப்புகளைத் தொடர்ந்து, சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை என கடைசியில் தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றியுள்ளது” என பேசியுள்ளார். ராகுல் காந்தியின் பேச்சை கேட்டதும் பாஜக -வினர் கொந்தளித்து அமளியில் ஈடுபட்டனர்.
லோக்சபாவில் 10 மணி நேரம் SIR விவாதம் நடைபெறும் என்றும், இதற்கான பதிலை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் நாளை அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.