

மத்திய பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றில் பர்கி அணை அருகே சுற்றுலா சென்ற சொகுசு படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டெல்லியைச் சேர்ந்த தாயும் அவரது நான்கு வயது மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்திலிருந்து இன்று காலை இவர்களது உடல்கள் மீட்கப்பட்டபோது, தனது பிஞ்சு மகனை எவ்வாறாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற தவிப்பில் அந்தத் தாய் குழந்தையைத் தனது நெஞ்சோடு இறுக அணைத்தபடி உயிரிழந்து கிடந்த காட்சி மீட்புப் படையினரையே நிலைகுலையச் செய்துள்ளது. டெல்லியிலிருந்து சுற்றுலா வந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் தந்தை மற்றும் மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், இந்த கோர விபத்தில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வானிலை திடீரென மோசமடைந்து பலத்த காற்று வீசத் தொடங்கிய சில நொடிகளிலேயே தனது மனைவி, மாமியார் மற்றும் பேரன் ஆகியோர் கண் இமைக்கும் நேரத்தில் ஆற்றுக்குள் மூழ்கி மறைந்துவிட்டதாக விபத்தில் சிக்கிய சையத் ரியாஸ் ஹுசைன் என்பவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். படகு நிலைதடுமாறி தண்ணீருக்குள் மூழ்கத் தொடங்கியபோது அங்கு என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை என்றும், மரண பயத்தில் மக்கள் அலறிய சத்தம் மட்டுமே கேட்டதாகவும் அவர் கூறினார். படகு மூழ்கியபோது தானும் தண்ணீருக்குள் தத்தளித்ததாகவும், இனி பிழைக்க மாட்டோம் என்று நினைத்த வேளையில் ஒரு அதிசயம் நடந்ததாக அவர் விவரிக்கிறார்.
தண்ணீருக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தபோது ஒரு குறுகிய இடைவெளியில் தலையை மட்டும் வெளியே நீட்டி மூச்சுவிடும் வகையில் சிக்கிக் கொண்டதாக ரியாஸ் கூறுகிறார். சுமார் இரண்டு மணி நேரம் அந்த மரணப் போராட்டத்திற்கு இடையில் மிதந்து வந்த உடல்களைப் பார்த்துக்கொண்டு தவித்த அவரை, மீட்புக் குழுவினர் கண்டெடுத்து பத்திரமாக மீட்டனர். இருப்பினும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இன்னும் மாயமானவர்களின் பட்டியலிலேயே உள்ளனர். அவர்கள் உயிருடன் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த கோர விபத்தில் இதுவரை 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 17 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் ஐந்து குழந்தைகள் உட்பட மேலும் ஒன்பது பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. உள்ளூர் போலீசார், மாவட்ட அதிகாரிகள் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து மாயமானவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தின்போது பாதுகாப்பு கவசம் அணிந்திருந்த படகின் மாலுமி மகேஷ் படேல் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.