இலவச ரேஷன் திட்டத்தில் பெரும் குளறுபடி? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இந்த இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.
இலவச ரேஷன் திட்டத்தில் பெரும் குளறுபடி? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Published on: 
Updated on: 
2 min read

ஏழை மக்களின் பசியைப் போக்கவும், குடும்பங்களின் உணவுச் செலவைக் குறைக்கவும் மத்திய அரசு இலவச ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பெற்று வருகின்றனர். ஆனால், உண்மையில் உதவி தேவைப்படும் மக்களுக்குத்தான் இந்தத் திட்டத்தின் பலன் கிடைக்கிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மத்திய அரசு நடத்திய ஆய்வில், இலவச உணவு தானியங்களைப் பெறும் பயனாளிகளில் 13.2 சதவீதம் பேர் அதற்குத் தகுதியற்றவர்களாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இந்த இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. 2025-26 நிதியாண்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 51,303 குடும்பங்களிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் கிராமப்புறம், நகர்ப்புறம் என இரு பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. ஆய்வில் கிடைத்த தகவலின்படி, சில மாநிலங்களில் வசதி படைத்த குடும்பங்களும் இலவச ரேஷன் பொருட்களைப் பெற்று வருகின்றன. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட சொந்த வீடு, கார், ஏசி போன்ற வசதிகள் கொண்ட குடும்பங்கள் மட்டுமின்றி, அரசு வேலை பார்ப்பவர்கள் உள்ள குடும்பங்களும் பயனாளிகள் பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தகுதியற்ற குடும்பங்கள் பயனாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள விகிதம் மேற்கு வங்கத்தில் 39.5 சதவீதமாகவும், திரிபுராவில் 39.2 சதவீதமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் இது 38.7 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. மேகாலயாவில் 28.5 சதவீதமாக உள்ளது. இதற்கு மாறாக மத்தியப் பிரதேசத்தில் 0.5 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 0.3 சதவீதம், ஹரியானா மற்றும் டெல்லியில் தலா 1 சதவீதம் என்ற அளவில் மட்டுமே இந்தக் குறைபாடு காணப்பட்டுள்ளது. கிராமப்புறங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் இந்தப் பிரச்சினை அதிகமாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் 12.5 சதவீதமாக இருக்கும் தகுதியற்ற பயனாளிகளின் விகிதம், நகர்ப்புறங்களில் 15.6 சதவீதமாக உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. முன்னுரிமைக் குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் கிடைக்கின்றன. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, கிராமப்புறங்களில் 75 சதவீத மக்களுக்கும், நகர்ப்புறங்களில் 50 சதவீத மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்சமாக 81.35 கோடி பேருக்குப் பயன் கிடைக்கலாம். 2026 அக்டோபர் நிலவரப்படி சுமார் 78.63 கோடி பேர் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு செலவிடும் தொகையும் மிக அதிகம். 2025-26 நிதியாண்டில் உணவு மானியத்திற்காக மட்டும் ரூ.2.28 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படும் நிலையில், உண்மையில் வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கே உதவி சென்றடைவதை உறுதி செய்வது அவசியமாகிறது.

பயனாளிகளை அடையாளம் காண்பதில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் தனித்தனி பொறுப்புகள் உள்ளன. திட்டத்தின் கீழ் பயன்பெறக்கூடிய மொத்த எண்ணிக்கையை மத்திய அரசு நிர்ணயிக்கிறது. ஆனால், யாருக்கு ரேஷன் அட்டை வழங்க வேண்டும், யார் தகுதியானவர்கள் என்பதை மாநில அரசுகள்தான் முடிவு செய்கின்றன. குடும்ப வருமானம், சொத்து, நிலம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் இதற்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. தகுதியுள்ளவர்கள் மட்டுமே தொடர்ந்து பயன்பெறும் வகையில் பயனாளிகள் பட்டியலை அவ்வப்போது சரிபார்த்து புதுப்பிக்க வேண்டும் என்று ஆய்வு வலியுறுத்துகிறது. அதேசமயம், உண்மையில் உதவி தேவைப்படும் ஏழைக் குடும்பங்கள் எந்தச் சூழலிலும் இந்தத் திட்டத்தின் பலனை இழந்துவிடக் கூடாது. தகுதியற்றவர்களை நீக்குவதும், தகுதியானவர்களைப் பாதுகாப்பதும் அரசின் முக்கியப் பொறுப்பாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.