கலவர பூமியாய் மணிப்பூர்....! அசாமுக்கு தஞ்சம் புகுந்த மக்கள்...! உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் ...! - மணிப்பூர் அரசு.

கலவர பூமியாய் மணிப்பூர்....! அசாமுக்கு தஞ்சம் புகுந்த மக்கள்...!    உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் ...! - மணிப்பூர் அரசு.
Published on
Updated on
2 min read

மணிப்பூர் கலவரத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டுமென மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கே உத்தரவிட்டார். இதுகுறித்து பேசிய மம்தா, மணிப்பூர் துப்பாக்கிச் சூட்டில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது  குறித்த புள்ளிவிவரம் அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை எனவும், அதுவே மேற்கு வங்காளத்தில் ஏதாவது நடந்தால், குழுக்களை அனுப்பி, பல விளக்கங்களை அளித்து மத்திய அரசு அவர்களது முடிவை பாதுகாப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். 

இதனைத்தொடர்ந்து, மணிப்பூர் வன்முறையில் பொதுமக்கள் 60 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். 

700 வீடுகள் தீ வைத்து.....

கடந்த (மே) 3 -ம் தேதி மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் குறித்து விளக்கம் அளித்த முதலமைச்சர் பிரேன்சிங், வன்முறையில் பொதுமக்கள் 60 பேர் உயிரிழந்ததாகவும்,  231 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஆயிரத்து 700 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை, அவர்களுடைய சொந்த இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கி உள்ளதாக கூறினார். 

இந்நிலையில் வன்முறையில் உயிரிழந்த குடும்பத்திற்கு  தலா 5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அசாமில் தஞ்சமடைந்தவர்களை  மீட்கும் பணி:----

 அசாமில் தஞ்சமடைந்துள்ள மணிப்பூர் மக்களில் பெரும்பாலானோர் இன்று வீடு திரும்புவார்கள் என அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா தெரிவித்துள்ளார். மணிப்பூரில் பழங்குடியின மாணவர் இயக்கத்தினர் நடத்திய பேரணி வன்முறையாக வெடித்தது. 

இதில் பல்வேறு குடியிருப்புகள் தீக்கிரையாகிய நிலையில் வீடுகளை இழந்த அம்மாநில மக்கள் அசாமில் உள்ள கச்சார் மாவட்டத்தில் தஞ்சமடைந்தனர். மேலும் இதுவரை கலவரப்பகுதிகளில் இருந்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு ராணுவ பாதுகாப்புடன் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கச்சார் மாவட்டத்தில் தஞ்சமடைந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்று முதல் தங்களது சொந்த ஊர் திரும்புவார்கள் என ஹிமாந்த பிஸ்வா தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com