
1932-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த இந்தியாவில், தற்போதைய பாகிஸ்தானின் கா என்ற பகுதியில் மன் மோகன் சிங் பிறந்தார். இளமைப் பருவத்திலேயே கல்வியில் சிறந்து விளங்கிய மன் மோகன் சிங், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார்.தொடர்ந்து, 1962-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் D.Phil பட்டம் பெற்ற மன் மோகன் சிங், பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பொருளாதார கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார்.பின்னர் 1972-ஆம் ஆண்டு, நிதி அமைச்சகத்தின் தலைமை ஆலோசகராக இணைந்தார். தொடர்ந்து 1976-ஆம் ஆண்டு நிதி அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.இதன் பிறகு 1982-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மன் மோகன் சிங் நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து இந்திய திட்ட ஆணையத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.
பின்னர் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பொருளாதார அமைப்பில் பொதுச் செயலாளராக இருந்த மன் மோகன் சிங், 1990-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினர்.தொடர்ந்து அப்போதைய பிரதமர் சந்திர சேகரின் பொருளாதார ஆலோசகராக இருந்த அவர், 1991-ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.முதன்முறையாக 1991-ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்வான மன் மோகன் சிங், தொடர்ந்து 1995, 2001, 2007, 2013 ஆகிய ஆண்டுகளில் அசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.இதற்கிடையே, 1999-ஆம் ஆண்டு டெல்லி தெற்கு மக்களவை தொகுதியில் போட்டியிட்டிருந்த மன் மோகன் சிங் தோல்வியை தழுவினார்.பின்னர், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மன் மோகன் சிங், 2004-ஆம் ஆண்டு நாட்டின் 13-வது பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். தொடர்ந்து 10 ஆண்டு காலம் பிரதமர் பதவி வகித்து வந்தார்.
நேரு, இந்திரா காந்திக்கு பின், தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமையையும் மன் மோகன் சிங் பெற்றார். இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான மன் மோகன் சிங்கின் பதவிக் காலம், கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில், அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.