Microsoft சேவை முடங்கியதைப் பயன்படுத்தி புதிய மோசடி! இந்த மின்னஞ்சலை மட்டும் திறக்காதீர்கள்!

பார்ப்பதற்கு இந்த மின்னஞ்சல்கள் உண்மையான சேவை அறிவிப்பு போலவே இருக்கலாம்...
Microsoft Outlook Phishing Email Scam
Microsoft Outlook Phishing Email Scam
Published on: 
Updated on: 
2 min read

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் Outlook, Teams உள்ளிட்ட சேவைகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியதால் லட்சக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டனர். இந்தப் பிரச்சினை ஒருபுறம் சரிசெய்யப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் இதையே பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் புதிய மோசடியில் இறங்கியுள்ளனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போலவே போலி மின்னஞ்சல்களை அனுப்பி, பயனர்களின் கணக்குத் தகவல்களைத் திருட முயற்சி நடைபெறுவதாக நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த நவம்பர் 12-ம் தேதி மைக்ரோசாஃப்ட் 365 சேவைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக Outlook மின்னஞ்சல் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பலரால் தங்களது மின்னஞ்சல் கணக்குகளைத் திறக்கவோ, புதிய மின்னஞ்சல்களை அனுப்பவோ, வந்த மின்னஞ்சல்களைப் பார்க்கவோ முடியவில்லை. இதனுடன் Teams, Copilot உள்ளிட்ட சேவைகளிலும் சில பாதிப்புகள் ஏற்பட்டன. இந்தச் சேவை முடக்கம் 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் அலுவலகப் பணிகள், நிறுவனங்களின் தகவல் தொடர்பு உள்ளிட்ட பல செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.

இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சைபர் குற்றவாளிகள், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடமிருந்து வந்ததுபோல போலி மின்னஞ்சல்களை அனுப்பத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, சேவை முடங்கிய நேரத்தில் பயனர்கள் அனுப்பிய அல்லது பெற வேண்டிய மின்னஞ்சல்கள் நிலுவையில் இருப்பதாக அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டுவிடும் என்றும், அவற்றை மீண்டும் பெறுவதற்கு குறிப்பிட்ட லிங்கை அழுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு இந்த மின்னஞ்சல்கள் உண்மையான சேவை அறிவிப்பு போலவே இருக்கலாம். ஆனால், அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை அழுத்தினால் பயனர்களின் கணக்குத் தகவல்களைத் திருடுவதற்கான முயற்சி நடைபெறலாம் என்று மைக்ரோசாஃப்ட் அச்சம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற மோசடிகள் 'பிஷிங்' (Phishing) என்று அழைக்கப்படுகின்றன. அதாவது, நம்பகமான நிறுவனம் அல்லது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி போலியான இணையதளங்களுக்கு மக்களை அழைத்துச் சென்று, அவர்களது மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் போன்ற ரகசியத் தகவல்களைப் பெறுவதே இந்த மோசடியின் நோக்கமாகும்.

மைக்ரோசாஃப்ட் த்ரெட் இன்டலிஜென்ஸ் குழு வெளியிட்ட தகவலின்படி, இந்த மோசடி மின்னஞ்சல்கள் நவம்பர் 13-ம் தேதி கண்டறியப்பட்டுள்ளன. அவற்றின் தலைப்பில் 'Outage' என்ற வார்த்தையுடன் ஆறு எழுத்துகள் அல்லது எண்கள் கொண்ட குறியீடு இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட சில போலி இணையதள முகவரிகள் மூலமாக இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இந்த மோசடி முயற்சியின் இலக்காக இருந்துள்ளன.

இதையடுத்து Outlook மற்றும் Teams பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும் பயனர்களுக்கும் மைக்ரோசாஃப்ட் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. சேவை தொடர்பான உண்மையான அறிவிப்புகளை மின்னஞ்சலில் வரும் லிங்குகள் மூலம் சரிபார்க்காமல், நேரடியாக Microsoft 365 Admin Center இணையதளத்தில் சென்று உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களைத் திறப்பதையும், அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளை அழுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும், ஏற்கெனவே இதுபோன்ற லிங்குகளை அழுத்தியிருக்கிறார்களா என்பதை நிறுவனங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பாதுகாப்புக் கருவிகள் மூலமாக சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களையும் இணையதள முகவரிகளையும் கண்டறிய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட பயனர்கள் தங்களது சேவைகளை மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், மறுபுறம் அதே பிரச்சினையைப் பயன்படுத்தி மோசடி நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பெயரில் அவசர எச்சரிக்கை மின்னஞ்சல் வந்தால் பதற்றத்தில் எந்த லிங்கையும் அழுத்த வேண்டாம். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவலைச் சரிபார்த்த பிறகே அடுத்த நடவடிக்கையை எடுப்பது பாதுகாப்பானது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.