இன்று முதல் 'பால் விலை' கிடுகிடு உயர்வு! டீ முதல் தயிர் வரை எல்லாத்துக்கும் விலை ஏறப்போகுதா? பட்ஜெட் குடும்பங்களுக்கு ஷாக்!

ஏற்கெனவே சமையல் எண்ணெய், காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் குடும்பச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில்
milk price hike
Published on: 
Updated on: 
2 min read

காலையில் எழுந்ததும் டீ, காபி தயாரிப்பது முதல் குழந்தைகளுக்குப் பால் கொடுப்பது வரை ஒவ்வொரு வீட்டிலும் அத்தியாவசியப் பொருளாக இருப்பது பால். ஏற்கெனவே சமையல் எண்ணெய், காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் குடும்பச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், தற்போது பால் விலையும் உயர உள்ளது. முன்னணி பால் விற்பனை நிறுவனமான அமுல், தனது முக்கிய பால் வகைகளின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்தப் புதிய விலை நவம்பர் 12ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் தினமும் பால் வாங்கும் குடும்பங்களின் மாதச் செலவு மேலும் அதிகரிக்க உள்ளது.

குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு (GCMMF) அமுல் என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் முக்கிய அமுல் பாக்கெட் பால் வகைகளின் விலை சுமார் 4 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. பால் வகையைப் பொறுத்து இந்த விலை மாற்றம் மாறுபடும். குறிப்பாக அமுல் தாஜா மற்றும் அமுல் கோல்டு ஆகிய இரண்டு முக்கிய வகைகளின் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமுல் தாஜா என்பது 3 சதவீத கொழுப்புச் சத்து கொண்ட டோன்டு பால் வகையாகும். இதன் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு, இனி ரூ.62 ஆக இருக்கும். அதேபோல், 6 சதவீத கொழுப்புச் சத்து கொண்ட அமுல் கோல்டு பால் விலை லிட்டருக்கு ரூ.4 அதிகரிக்கப்பட்டு ரூ.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற முக்கிய பால் வகைகளுக்கும் விலை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்து வகைகளுக்குமான திருத்தப்பட்ட விலைகளையும் நிறுவனம் தனித்தனியாக வெளியிடவில்லை. எனவே, ஒவ்வொரு பாக்கெட்டின் புதிய விலையையும் விற்பனை நிலையங்களில் சரிபார்ப்பது அவசியம்.

இந்த விலை உயர்வுக்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுவது இயல்புதான். இதுகுறித்து அமுல் நிறுவனம் கூறுகையில், கடந்த ஓராண்டாக பால் உற்பத்தி மற்றும் விநியோகத்துக்கான செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம், உலர்ந்த தீவனம், கால்நடை உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. மேலும், கால்நடைத் தீவனத்தில் பயன்படுத்தப்படும் எண்ணெய் புண்ணாக்கு, மக்காச்சோளம், கரும்பு வெல்லம் போன்ற பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள் மற்றும் பால் கொண்டு செல்லத் தேவையான எரிபொருள் செலவும் உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. குஜராத் உள்ளிட்ட பல பகுதிகளில் குறைவான மற்றும் சீரற்ற மழைப்பொழிவு ஏற்பட்டிருப்பதும் பால் உற்பத்தியைப் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளன.

விலை உயர்வுக்கான மற்றொரு முக்கிய காரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் கொள்முதல் விலையையும் அமுல் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஓராண்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொள்முதல் விலையை அதன் உறுப்பினர் கூட்டுறவு சங்கங்கள் 4 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. இந்தத் தொகையைத் தொடர்ந்து வழங்குவதற்கும், பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் விலை மாற்றம் அவசியமாகியுள்ளதாக நிறுவனம் விளக்கியுள்ளது. அமுல் கூட்டுறவு அமைப்பு மூலம் நுகர்வோரிடமிருந்து கிடைக்கும் வருவாயில் சுமார் 80 சதவீதம் 36 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்குத் திரும்பச் செல்கிறது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமுல் நிறுவனத்தின் அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே மதர் டெய்ரி நிறுவனமும் பால் விலையை உயர்த்தியுள்ளது. அந்த நிறுவனத்தின் பால் விலை உயர்வு நவம்பர் 12ஆம் தேதி முதல் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் அமலுக்கு வருகிறது. அங்கு பால் வகைகளைப் பொறுத்து லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் முன்னணி பால் நிறுவனங்கள் இரண்டும் ஒரே நாளில் விலை உயர்வை அறிவித்துள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, அமுல் பால் வாங்கும் நுகர்வோர் புதிய விலையை கவனிக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில், இந்த அறிவிப்பை வைத்து ஆவின் பால் விலையும் உயரப்போகிறது என்று முடிவு செய்ய முடியாது. ஆவின் தொடர்பாகத் தனியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தினமும் ஒரு லிட்டர் அல்லது இரண்டு லிட்டர் பால் வாங்கும் குடும்பங்களுக்கு இந்த விலை உயர்வு சிறிய தொகையாகத் தோன்றினாலும், மாதக் கணக்கில் பார்த்தால் கூடுதல் செலவு ஏற்படும். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் உள்ள வீடுகளில் பால் அத்தியாவசியத் தேவையாக இருப்பதால் இந்த மாற்றம் குடும்ப பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். உற்பத்திச் செலவு உயர்வு விவசாயிகளையும் பாதிக்கும் நிலையில், அதன் ஒரு பகுதி தற்போது நுகர்வோரின் பைகளுக்கும் வந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.