கேரளா மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில், கடந்த மாதம் 11ம் தேதி அதிகாலையில் நடந்த கோர விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். நெடும்பாசேரி பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற மூன்று இளைஞர்களை, பின்னால் வேகமாக வந்த மினி கூப்பர் கார் மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கார், இளைஞர்கள் வந்த ஸ்கூட்டரை சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளது. இந்த கோர விபத்தில் இளைஞர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விசாரணையில் காரை ஓட்டியவர் சுஹைல் சஜீவ் என்ற 19 வயது இளைஞர் என்பது தெரியவந்தது. இந்த விபத்து கேரள மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும் இந்த விபத்திற்கு பிறகு முக்கிய குற்றவாளியான சுஹைல் சஜீவ் பேசிய கருத்துக்கள், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. “சாலைகள் எதற்காக இருக்கின்றன? வாகனம் ஓட்டுவதற்குத்தானே?” என்று அவர் கேட்டதாக செய்திகள் வெளியானது. மேலும், இந்த விவகாரத்தை "என் அப்பா பார்த்துப்பார்” என்று கூறியதாக வெளியான செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கிடையில், சுஹைல் சஜீவ் ஓட்டி வந்த மினி கூப்பர் காரைத் தயாரித்த பிஎம்டபிள்யூ நிறுவனம், அந்த வாகனத்தை ஆய்வு செய்ததில், விபத்து நடப்பதற்கு ஐந்து வினாடிகள் முன்பு, காரின் வேகம் மணிக்கு சுமார் 162 கி.மீ. ஆக இருந்தது என தெரிவித்துள்ளது. மேலும் கவலை துறை சார்பில் இருந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், வாகனம் அதிவேகமாகச் சென்றதும், பிஎம்டபிள்யூ நிறுவனம் நடத்திய தொழில்நுட்ப ஆய்வில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சொகுசு கார் வெறும் 11 வினாடிகளில் 500 மீட்டர் தூரம் பயணித்ததை புலனாய்வாளர்கள் கண்டறிந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்போது இந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது. காரில் உடன் பயணித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்படும் என்றும் குடிபோதையில் காரை ஓட்டிய முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுஹைல் சஜீவ் 10 நாட்களுக்குப் பிறகே விடுவிக்கப்படுவார் என்றும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. நெடும்பாசேரி மினி கூப்பர் விபத்து துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், வழக்கில் அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுவிட்டனவா? என்று கேள்வி எழுப்பியது. ஆதாரங்கள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இரண்டு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க அவகாசம் வேண்டும் என்றும் அரசுத் தரப்பு கோரியுள்ளது.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் 19 வயது மாணவர்கள் என்பதால், அவர்கள் நீண்டகால நீதிமன்றக் காவலில் இருந்தால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அரசுத் தரப்பு இந்த வாதங்களை எதிர்த்து… விபத்தில் உயிரிழந்த மூவரும் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் என்றும், அவர்கள் தான் குடும்பங்களின் நம்பிக்கையாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டு வாதிட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.