வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த மோச்சா புயல் அதி தீவிர புயலாக மாறியது. இதனால், புயல் கரையை கடக்கும் பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
தென்கிழக்கு ஒட்டிய மத்திய வங்கக் கடலில் கடந்த 6 மணி நேரத்தில் 9 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து அதிதீவிர புயலாக மோச்சா புயல் மாறியுள்ளது. நேற்று தீவிர புயலாக வலுப்பெற்று இன்று அதி தீவிர புயலாக மாறி மத்திய தென்கிழக்கு வங்க கடலில், போர்ட் பிளேயருக்கு மேற்கு - வடமேற்கில் சுமார் 520 கிலோ மீட்டரும், காக்ஸ் பஜாருக்கு ஆயிரத்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து கிழக்கு மத்திய வங்கக் கடலில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அதன் பின் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளை காக்ஸ் பஜார் மற்றும் கியாக்பியு இடையே 14 ஆம் தேதியன்று நண்பகலில் கரையை கடக்கவுள்ளது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்தில், இடை இடையே 175 கிலோ மீட்டர் வேகத்தில் கூட வீசுக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மீனவர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள், விசைப்படகுகள், மீனவர்கள் விரைவாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.