நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடர்ச்சியான அமளியால் சுமுகமாக நடைபெறவில்லை என்றாலும், பாஜக அரசு பிடிவாதமாக தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்வதற்காக ஆகஸ்ட் 17-ஆம் தேதி சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டலாம் என இந்தியா டுடே செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 13-ஆம் தேதியுடன் மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடையும் நிலையில், அதற்குப் பிறகு உடனடியாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட பாஜக திட்டமிட்டுள்ளது.
ஏனெனில், இந்த அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு (2/3) சிறப்புப் பெரும்பான்மை (Special Majority) பெறுவது கட்டாயமாகும்.
சட்டத்திருத்தத்திற்குத் தேவையான ஆதரவு வாக்குகள் கிடைத்தவுடன், குறுகிய கால அவகாச அறிவிப்பு (Short Notice) வழங்கி மீண்டும் அவையைக் கூட்டி, சிறப்புக் கூட்டத்தொடரின் மூலம் மசோதாவை நிறைவேற்ற முடியும் என பாஜக தரப்பு நம்புகிறது.
131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவின் ஒரு பகுதியாக, தொகுதி மறுவரையறை மசோதாவும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவும் இணைக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மூன்று நாள் சிறப்புக் கூட்டத்தொடரின் போது மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆனால், அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA), இரு அவைகளிலும் தேவையான மூன்றில் இரண்டு பங்கு சிறப்புப் பெரும்பான்மை இல்லாததால், அந்த மசோதாக்கள் நிறைவேறாமல் போயின.
இருப்பினும், அதற்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக, அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான சிறப்புப் பெரும்பான்மைக்கான இடைவெளி தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது.
குறிப்பாக, கடந்த மே மாதம் நடைபெற்ற மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் (TMC) கட்சி எதிர்கொண்ட பின்னடைவைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜகவின் அரசியல் நிலை மேலும் வலுவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆளுங்கட்சியாக இருந்தபோது, திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தொகுதி மறுவரையறை மசோதாவை கடுமையாக எதிர்த்தது. இதனால், மத்திய அரசில் தமிழகத்தின் அதிகாரப் பங்கீடு வெகுவாக பாதிக்கப்படும் என பிரசாரம் செய்தது.
ஆனால், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள திமுகவின் ஆதரவைப் பெற பாஜக முயற்சித்து வருகிறது.
எனவே, இந்த மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில் திமுகவின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய சக்தியாகக் கருதப்படுகின்றனர்.
குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருச்சி சிவா, "தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையிலேயே பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் திட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கிறது. ஆனால், தொகுதி மறுவரையறை மசோதா குறித்து இன்னும் தெளிவு தேவை. தென் மாநிலங்கள் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்