மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் புதிய அரசு பதவியேற்பு...!

மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் புதிய அரசு பதவியேற்பு...!
Published on
Updated on
1 min read

மேகாலயா முதலமைச்சராக கான்ராட் சங்மாவும், நாகாலாந்து முதலமைச்சராக நெய்பூ ரியோவும் பதவியேற்றுக் கொண்டனர்.

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயாவில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் நாகாலாந்து  மற்றும் மேகாலயாவில் பாஜக ஆதரவுடன் மாநில கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடித்தன. திரிபுராவில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.

இதனையடுத்து மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் பாகு சௌகானிடம் என்பிபி கட்சித் தலைவர் கான்ராட் சங்மா உரிமை கோரினார். இதனைத்தொடர்ந்து, ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில், இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றுது. அதன்படி, ஷில்லாங்கில் நடந்த பதவி ஏற்பு விழாவில் மேகாலயாவின் 13 ஆவது முதலமைச்சராக கான்ராட் சங்மா பதவி ஏற்று கொண்டார்.  அவருடன் 12 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இதேபோல், நாகாலாந்து மாநில முதலமைச்சராக நெய்பூ ரியோ ஐந்தாவது  முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் இல கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, தடிதுய் ரங்காவு, யாந்துங்கோ பட்டோன் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த இரு மாநிலங்களின் புதிய அரசு பதவியேற்கும் விழாவில் பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா, அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாஜக தனிப்பெரும்பான்மையில் வெற்றி பெற்ற திரிபுராவில்  8 ஆம் தேதி புதிய ஆட்சி அமைகிறது. அதில் பாஜகவின் மாணிக் சகா இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com