“இனி 12 நிமிஷம் லிமிட் கிடையாது!” TV விளம்பர நேரத்தில் அதிரடி மாற்றம்.. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய முடிவு!

அதிகபட்சமாக 10 நிமிடங்கள் வணிக விளம்பரங்களுக்கும், 2 நிமிடங்கள் சுய விளம்பர உள்ளடக்கத்திற்கும் அனுமதிக்கப்பட்டிருந்தது.
TV advertising limit India
TV advertising limit India
Published on
Updated on
2 min read

புதுடெல்லி, தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள ஒரு மணி நேரத்துக்கு 12 நிமிடங்கள் என்ற உச்சவரம்பை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதக் கூறப்பட்டுள்ளது. ஒளிபரப்புத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2006-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விளம்பர நேரக் கட்டுப்பாட்டை நீக்குவதற்கான முடிவு தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அன்றைய சமயத்தில் இந்தியாவில் வெறும் 62 தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 900-க்கும் மேற்பட்ட சேனல்கள் உள்ளதாக இதை பரீசீலிக்க வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 1994-ம் ஆண்டின் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்ஸ் விதிகளின் விதி 7(11)-ன் கீழ், தொலைக்காட்சி சேனல்கள் ஒரு மணி நேரத்தில் 12 நிமிடங்களுக்கு மேல் விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. இதில் அதிகபட்சமாக 10 நிமிடங்கள் வணிக விளம்பரங்களுக்கும், 2 நிமிடங்கள் சுய விளம்பர உள்ளடக்கத்திற்கும் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒளிபரப்புத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு இந்த விதிமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தற்போது அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தொலைக்காட்சி சேனல்கள், அவை 'பணம் கட்டி பார்க்கக்கூடிய சேன;லாக இருந்தாலும் சரி ' அல்லது 'இலவசமாக ஒளிபரப்பப்படும் சேனல்களாக இருந்தாலும் சரி', விளம்பர வருவாயை பெரிதும் அவை சார்ந்துள்ளன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், விளம்பர நேரத்துக்கு இதுபோன்ற உச்சவரம்பு கட்டுப்பாடு இல்லாத டிஜிட்டல் ஊடகங்களுடன் ஒப்பிடும்போது, பாரம்பரிய தொலைக்காட்சி சேனல்கள் சமமற்ற போட்டி நிலையை எதிர்கொள்வதாகஅமைச்சகம் கூறியுள்ளது. எனவே, நியாயமான போட்டியை உறுதி செய்வதற்கும், தொழில் செய்வதை எளிதாக்குவதற்கும் இந்தக் கட்டுப்பாடு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பர நேரக் கட்டுப்பாடு தொடர்பாக பல்வேறு பொழுதுபோக்கு சேனல்கள், செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் பிராந்திய சேனல்கள் சட்டப்பூர்வ செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தன.

ஆனால், கடந்த மே மாதம், நீதிபதிகள் அனில் க்ஷேதர்பால் மற்றும் அமித் மகாஜன் அடங்கிய அமர்வு அந்த மனுக்களை தள்ளுபடி செய்தது. ஒரு மணி நேரத்திற்கு 10+2 நிமிடங்கள் என்ற உச்சவரம்பை நிர்ணயிப்பதில் TRAI தனது சட்டப்பூர்வ அதிகாரத்திற்கு உட்பட்டே செயல்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இந்த விதிமுறை ஒளிபரப்பாளர்களின் உரிமைகளுக்கும் பொது நலனுக்கும் இடையில் சரியான சமநிலையை ஏற்படுத்துவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் மற்றும் வானொலி அலைவரிசைகள் அரசால் நம்பிக்கையின் அடிப்படையில் பாதுகாக்கப்படும் அரிதான பொது வளங்கள் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அவற்றின் அதிகப்படியான வணிகச் சுரண்டலைத் தடுப்பதுடன், அவற்றை சமமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக இந்தக் கட்டுப்பாடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. விளம்பர வருவாய் மற்றும் வணிக ரீதியான உரிமைகளை இந்த உச்சவரம்பு பாதிப்பதாக ஒளிபரப்பாளர்கள் முன்வைத்த வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

1994-ம் ஆண்டின் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்ஸ் விதிகளில் மேற்கொள்ளப்படும் திருத்தம் அரசிதழில் அறிவிக்கப்பட்டவுடன் இந்த முடிவு நடைமுறைக்கு வரும் என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், தொலைக்காட்சி சேனல்களில் ஒரு மணி நேரத்துக்கு அனுமதிக்கப்படும் விளம்பர நேரம் தொடர்பான தற்போதைய 12 நிமிட உச்சவரம்பு நீக்கப்பட உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com