

மாணவிகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டிய நாடு தழுவிய கொள்கையை வகுக்கக் கோரிய பொது நல வழக்கை விசாரிக்க இந்திய உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. மாதவிடாய் காலத்தில் பெண்கள், மாணவிகளாக இருந்தாலும் சரி, பணிபுரியும் நிபுணர்களாக இருந்தாலும் சரி, விடுப்பு வழங்கப்படுவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரினார். ஆனால், அவரது வழக்கை உச்சநீதி மன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.
இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி தலைமையிலான அமர்வு, சட்டத்தின் மூலம் மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்குவது பணியிடத்தில் உள்ள பெண்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கூறியது. சட்டப்பூர்வமாக கூடுதல் ஊதிய விடுப்பு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், முதலாளிகள் பெண்களை வேலைக்கு அமர்த்த தயங்கக்கூடும் என்றும் தலைமை நீதிபதி எச்சரித்தார். ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு விதிகளை வகுக்க மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தபோது நீதிபதி, இதுபோன்ற ஒரு சட்டம், வேலை செய்யும் பெண்களிடையே 'ஆண்களை விட அவர்கள் 'குறைவானவர்கள்' என்ற உளவியல் பயம் அல்லது தோற்றத்தை உருவாக்கும்' என்று தலைமை நீதிபதி இன்று காலை வாதிட்டார். "தன்னார்வமாக முன்வந்து விடுப்பு வழங்குவது சிறந்தது. ஆனால் சட்டத்தில் அதை கட்டாயமாகும் பட்சத்தில், யாரும் பெண்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள்," என்று விசாரணையின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் கூற்றுப்படி, விடுப்பு எடுப்பதற்கான கட்டாயக் காரணமாக மாதவிடாயைக் கட்டமைப்பது, பணியிடங்களில் பெண்கள் குறைவான வேலைசெய்யும் திறன் கொண்டவர்கள் அல்லது குறைவான நம்பகத்தன்மை கொண்டவர்கள் என்ற எதிர்மறையான கருத்துக்களுக்கு வழிவகுக்கும். மேலும், "பெண்களை தாழ்ந்தவர்கள் என்று அழைப்பதற்காகவும், மாதவிடாய் என்பது அவர்களுக்கு நடக்கும் மோசமான ஒன்று என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இது அமையும்" என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், மூத்த வழக்கறிஞர் எம்.ஆர். ஷம்ஷாத், 2013 ஆம் ஆண்டு கேரள அரசு அனைத்து அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்கியதை சுட்டிக்காட்டினார். அப்போது முதல்வர் பினராயி விஜயன் இந்த முடிவு "பாலின நீதி சமூகத்தை நனவாக்குவதற்கான உறுதிப்பாட்டின்" ஒரு பகுதியாகும் என்று கூறியிருந்தார். தனியார் நிறுவனங்களும் இதேபோன்ற தளர்வுகளைச் செய்ததாக ஷம்ஷாத் சுட்டிக்காட்டினார். இருப்பினும் தலைமை நீதிபதிகள், அவ்வாறு தன்னார்வமாக மாதவிடைக்கான விடுப்பு வழங்குவது நல்லது. ஆனால் அதை கட்டாயமாக்குவது என்பது பெண்களுக்கே பாதகமாக முடியும் என்று கூறியுள்ளனர்.
மாதவிடாய் விடுப்பு கட்டாயமாக்கப்பட மாநிலங்கள்: கடந்த ஆண்டு 2025, அக்டோபர் 09ம் தேதி கர்நாடக அரசு பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை அங்கீகரித்தது. பெண் தொழிலாளர் பங்களிப்பு விகிதத்தில் கர்நாடகா 31.5% உடன் இந்தியாவிலேயே மிக உயர்ந்த மாநிலங்களில் ஒன்றாக உள்ளது கர்நாடக மாநிலம். இதுமட்டுமின்றி இந்தியாவில் மாதவிடாய் விடுப்பு கொள்கைகள் புதியவை அல்ல என்றாலும், பீகார் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் ஏற்கனவே இதேபோன்ற ஒன்றை செயல்படுத்தி வருகின்றன. மாதவிடாய் விடுப்பு கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பெண்களைப் பணியமர்த்தும் அனைத்துத் துறைகளிலும், பெண் ஊழியர்களின் உடல்நலத்திற்காக மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதற்கான கொள்கை இருக்கும், என்று மாநில அரசு தனது உத்தரவில் தெரிவித்தது கர்நாடக அரசு. இதுமட்டுமின்றி, 1992 ஆம் ஆண்டில், பீகார் வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பை அறிமுகப்படுத்தியது. மேலும், ஒடிசாவில் 2024ல் ஆகஸ்ட் 16ம் தேதி பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு வழங்கியது.
ஆனால் சட்டரீதியாக இதை கட்டாயமாகும்போது பெண்கள் இதனால் சிக்கல்களை சந்திக்க வாய்ப்பிருப்பதாக நாடு தழுவிய கட்டாய மாதவிடாய் விடுப்பு கோரிய மனுவை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்ற அமர்வில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் கூறியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.