
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை கிட்டத்தட்ட கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்ட நிலையில், வழக்கமான சர்வதேச பயணிகள் விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியா தயாரானது. வரும் 15-ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அதற்குள் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளுக்கும் பரவ தொடங்கியதால் பல நாடுகள் சர்வதேச விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திட்டமிட்டிருந்தபடி சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்காமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்டமிட்டபடி வரும் 15-ஆம் தேதி முதல் வழக்கமான சர்வதேச பயணிகள் விமான சேவை தொடங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.