"எல்லா கோட்டையும் அழிங்க" தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்தணும்... முன்னாள் முதல்வர்கள் கொதித்தெழுவது ஏன்?

"இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது. சுதந்திரமாகவும் - வெளிப்படைத்தன்மையோடும் - அரசியல் குறுக்கீடுகள் இல்லாமலும் செயல்பட வேண்டிய உச்ச அமைப்பின் மீது மிகப் பெரும் களங்கம் படிந்துள்ளது." - ஸ்டாலின் குற்றச்சாட்டு
Mamata Banerjee, MK Stalin, Uddhav Thackeray
"எல்லா கோட்டையும் அழிங்க" தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்தணும்... முன்னாள் முதல்வர்கள் கொத்தெழுவது ஏன்?
Published on
Updated on
2 min read

சிவசேனா (UBT) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற முழக்கத்தை எழுப்பியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடன் மற்ற இரு தேர்தல் ஆணையர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தது குறித்த சர்ச்சை எழுந்துள்ளதால் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மற்றும் வாக்காளர் பட்டியல்களைக் கையாண்ட விதம் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், ஞானேஷ் குமார் பதவிக்காலத்தில் நடைபெற்ற தேர்தல்கள் செல்லுபடியாகாது என தாக்ரே வாதிடுகிறார்.

மகாராஷ்டிராவில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல்களில் அதிக எண்ணிக்கையிலான பெயர்கள் சேர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சிறப்பு தீவிர மறுஆய்வு (SIR) நடைமுறையின்போது, சக ஆணையர்களுக்குத் தெரிவிக்காமல் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாக சமீபத்திய செய்தி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால், SIR செயல்பாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளை இப்போது மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார் தாக்கரே.

இந்தக் குற்றச்சாட்டுகள் நடந்து முடிந்த தேர்தல்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதால், புதிய தேர்தல் நடத்துவதுதான் சரியான முடிவு என்கிறார் அவர்.

தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், குறிப்பாக சிறப்பு தீவிர மறுஆய்வு (SIR) நடவடிக்கையின்போது, 10 மாத காலப்பகுதியில் 14 முறை தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என சமீபத்திய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து, ஞானேஷ் குமாரைப் பதவியில் இருந்து நீக்கி, கைது செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரே வலியுறுத்துகிறார்.

தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. உறுப்பினர்கள் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கலந்தாலோசனையின் ஒரு பகுதி என்றும், இறுதி முடிவுகள் ஒருமனதாகவே எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

உத்தவ் தாக்கரே இந்தக் குற்றச்சாட்டுகளுடன், வருங்காலத்தில் தேர்தல் நடத்த வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

தாக்ரே மட்டுமல்ல தமிழக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், "சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்களை நீக்கும் முடிவுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு அவசர கதியில் நடத்தப்பட்ட இந்தப் பணியில் பல குளறுபடிகள் நடந்தன. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் போர்க்களம் ஆயின.

இந்நிலையில், இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள செய்தி, SIR-க்குப் பின்பு நடந்த அனைத்துச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

மூன்று தேர்தல் ஆணையர்களில் திரு. சுக்பிர் சிங் சந்து மற்றும் திரு. விவேக் ஜோஷி ஆகிய இருவருக்கும், தேர்தல் கமிஷனில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மறைத்து வைக்கப்பட்ட செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவது குறித்து, 10 மாதங்களில் 14 முறை அவர்கள் ஆட்சேபணை தெரிவித்தும் அவர்கள் புறக்கணிப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மையையே முற்றிலுமாகச் சீர்குலைத்துள்ளது.

...இதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது. சுதந்திரமாகவும் - வெளிப்படைத்தன்மையோடும் - அரசியல் குறுக்கீடுகள் இல்லாமலும் செயல்பட வேண்டிய உச்ச அமைப்பின் மீது மிகப் பெரும் களங்கம் படிந்துள்ளது.

ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தோம். இனியும் அவர் அந்தப் பதவியில் நீடிக்க கூடாது. ஞானேஷ் குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். SIR நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதுவரை தேர்தல் ஆணையத்தில் நடந்த அனைத்தும் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டு இதற்குப் பொறுப்பானர்வர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறோம்." என ட்வீட் செய்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com