தற்போது நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பைக்காக கனடா செல்ல விரும்பிய இந்தியர்கள் விண்ணப்பித்த 70 சதவீதத்திற்கும் அதிகமான வருகை விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்று ஆய்வு ஒண்டு வெளியிட்டுள்ளது.
உலக கால்பந்து ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பினை பெற்றதுதான் FIFA. இந்த முறை இந்த கால்பந்து போட்டியானது மெக்சிகோ, கனடா, அமெரிக்கா போன்ற 3 நாடுகள் நடத்துகின்றன. மேலும், இந்த விசா குறித்து கனடிய ஒளிபரப்பு நிறுவனமான CTV நியூஸால் பகுப்பாய்வு செய்யப்பட்ட, கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறையின் (IRCC) தரவுகளின்படி, இந்திய நாட்டினரால் சமர்ப்பிக்கப்பட்ட 1,225 வருகை விசா விண்ணப்பங்களில் 355 மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இது வெறும் 29% மட்டுமே ஆகும். அதாவது பத்தில் ஏழுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தரவுகள், கடந்த ஆண்டு நவம்பர் 15 முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரை செயலாக்கப்பட்ட, உலகக் கோப்பை தொடர்பான விசா விண்ணப்பங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக, இந்தக் காலகட்டத்தில் கனடிய குடிவரவு அதிகாரிகள், போட்டித்தொடர் தொடர்பாக ஏறத்தாழ 17,000 வருகையாளர் விசா விண்ணப்பங்களைப் பரிசீலித்துள்ளனர். இவற்றில், 41% மட்டுமே அங்கீகரிக்கப்பட்டன.
இது, பல நாடுகளில் விசா நிராகரிப்பு விகிதங்கள் அதிகமாகவே இருந்துள்ளன. கனடாவிற்கான உலகக் கோப்பை தொடர்பான விசா விண்ணப்பங்களின் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. கானா நாட்டில் இருந்து 1,725 விண்ணப்பங்களுடன் முதல் இடத்தில் அதிகபட்ச எண்ணிக்கையைப் பதிவு செய்தது, இருப்பினும் 11 சதவீதத்திற்கும் குறைவானவையே கனடா அரசால் அங்கீகரிக்கப்பட்டன. கொலம்பியா 1,630 விண்ணப்பங்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன், மிகவும் வலுவான அங்கீகார விகிதத்தையும் கண்டது. அங்கு விண்ணப்பித்தவர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் விசாக்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் 1,250 விண்ணப்பங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது, ஆனால் ஒப்புதல் எண்கள் இந்தியாவை விடவும் குறைவாக இருந்தன. அதாவது 102 பாகிஸ்தானிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே விசாக்கள் வழங்கப்பட்டன, இது 9%க்கும் குறைவானது ஆகும்.
இந்த முறை, கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுடன் இணைந்து ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்துகிறது. டொராண்டோ மற்றும் வான்கூவர் ஆகிய நகரங்களில் பிரித்து நடத்தப்படும் 13 போட்டிகளை அந்நாடு நடத்தவுள்ளது. இந்தப் போட்டித் தொடருடன் தொடர்புடைய தனியான “ஃபீஃபா விசா” அல்லது சிறப்பு குடிவரவு வழிமுறை எதுவும் இல்லை என ஐ.ஆர்.சி.சி தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், உலகக் கோப்பைப் போட்டிகளில் கலந்துகொள்ளத் திட்டமிடும் பார்வையாளர்கள், தங்கள் நாட்டினத்தைப் பொறுத்து, வழக்கமான வருகையாளர் விசா நடைமுறையின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் அல்லது மின்னணு பயண அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் அங்கீகரிக்கப்பட்ட தங்குவதற்கான காலம் முடிந்தவுடன் அவர்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அந்தத் துறை வலியுறுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.