

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு இந்திய ராணுவம் மீண்டும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டால் அதன் எதிர்விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று இந்திய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எச்சரித்துள்ளார்.
டெல்லியில் உள்ள மனேக்ஷா மையத்தில் நடைபெற்ற ‘யூனிஃபார்ம் அன்வெயில்ட்’ கலந்துரையாடல் நிகழ்வின் போது பேசிய அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை நினைவுகூர்ந்தார். அந்த நடவடிக்கைக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் மீண்டும் ஏற்பட்டால் இந்திய ராணுவம் எப்படி பதிலளிக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், பாகிஸ்தானுக்கு நேரடியாகவே கடும் எச்சரிக்கை செய்தி அனுப்பினார்.
“பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டால், உலக வரைபடத்தில் நீடிக்க வேண்டுமா அல்லது வெறும் வரலாறாக மாற வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்” என்று ஜெனரல் உபேந்திர திவேதி எச்சரித்தார். அவரது இந்த பேச்சு, இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்திய ராணுவமும் நாடும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் முதல் ஆண்டு நிறைவை நினைவுகூரும் சூழலில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி அதிகாலை, பஹல்காம் பகுதியில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையின் கீழ், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பல பயங்கரவாத முகாம்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது இந்தியப் படைகள் துல்லியமான தாக்குதல்களை மேற்கொண்டன.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்திய எல்லைப் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதாக கூறப்பட்டது. அதற்கு இந்திய ராணுவமும் கடுமையான எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டது. இரு அணு ஆயுத நாடுகளுக்கிடையே ஏற்பட்ட இந்த இராணுவ மோதல் சுமார் 88 மணி நேரம் நீடித்தது. பின்னர் மே 10ஆம் தேதி மாலையில் இரு நாடுகளும் புரிந்துணர்வை எட்டியதையடுத்து மோதல் நிறுத்தப்பட்டது. ஜெனரல் உபேந்திர திவேதியின் இந்த கருத்துக்கள் சுருக்கமாக இருந்தாலும், பாகிஸ்தானுக்கு இந்தியா விடுத்த மிகத் தெளிவான மற்றும் கடுமையான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.