“2047-க்குள் வளர்ந்த இந்தியா உருவாக வேண்டும்” - சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி!

தற்சார்பு பொருளாதாரமே நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும்..
80th Independence Day
PM Modi
Published on
Updated on
2 min read

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 13வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் உரையாற்றினார். சுதந்திர தின விழாவையொட்டி முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் அஞ்சலி செலுத்திய பிரதமர், பின்னர் செங்கோட்டைக்கு வந்து தேசியக் கொடியை ஏற்றினார். கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்கள் தூவப்பட்டு விழா சிறப்பிக்கப்பட்டது.

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் வரலாற்றில் முதல்முறையாக ‘வந்தே மாதரம்’ பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. விழாவில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் எதிர்கால வளர்ச்சி குறித்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் கருத்துகளையும் முன்வைத்தார். “நாம் இன்று 80வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். 2047ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, இந்தியா முழுமையாக வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதே நமது கனவு. இந்த இலக்கை 140 கோடி இந்தியர்களின் முயற்சியால் நிச்சயமாக அடைவோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும், “சிறிய கனவுகள் இனி போதாது. இந்தியா பெரிய இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகிய இந்தியா வளர்ச்சியை நோக்கி உறுதியாக முன்னேறுகிறது. 140 கோடி மக்களின் மன உறுதியை யாராலும் தடுக்க முடியாது” என்றும் அவர் கூறினார்.

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். “25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு உற்பத்தி நான்கு மடங்காக உயர்ந்துள்ளது. மின்னணு உற்பத்தி ஏழு மடங்காக அதிகரித்துள்ளது. உயர்தர ரயில் பெட்டி உற்பத்தி 21 மடங்காகவும், கைபேசி உற்பத்தி 33 மடங்காகவும் உயர்ந்துள்ளது. இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

“நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கு செமிகண்டக்டர் துறை மிகவும் முக்கியமானது. பிற நாடுகளை மட்டுமே நம்பி இருக்க முடியாது. சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும். தற்சார்பு பொருளாதாரமே நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும்” என்றும் பிரதமர் வலியுறுத்தினார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றியை சுட்டிக்காட்டிய அவர், “கடந்த 12 ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 100 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளன. தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, உற்பத்தி மற்றும் சமூக நலத் துறைகளில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது” என்றார்.

பிரதமரின் உரை முழுவதும் ‘விக்சித் பாரத் 2047’ என்ற இலக்கை மையமாகக் கொண்டிருந்தது. இந்தியா உலக அரங்கில் புதிய உயரங்களை எட்டும் என்ற நம்பிக்கையையும், வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் தேசிய உறுதியையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். இந்த ஆண்டு சுதந்திர தின உரை, இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி பாதையை சுட்டிக்காட்டும் முக்கிய அரசியல் மற்றும் பொருளாதார பார்வையாக அமைந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com