"சந்திரயான் நிலவில் கால் பதித்தாலும், பிரதமர் மணிப்பூரில் கால் பதிப்பதாய் இல்லை" அமைச்சர் பொன்முடி!!

"சந்திரயான் நிலவில் கால் பதித்தாலும், பிரதமர் மணிப்பூரில் கால் பதிப்பதாய் இல்லை" அமைச்சர் பொன்முடி!!
Published on
Updated on
1 min read

சந்திராயன் நிலவில் தடம் பதித்தாலும் பிரதமர் மணிப்பூர் செல்ல மறுப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் நடந்த நிகழ்வில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் ஆயத்திருவைத்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 

பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, நீட் தேர்வுக்கு விளக்கு கோரி திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரதம் இருந்தபோது அதனை அதிமுகவினர் விமர்சித்ததாகவும், மாநாட்டில் உணவை குப்பையில் வீசியவர்களுக்கு மக்கள் மீது மதிப்பில்லை எனவும் விமர்சித்துள்ளார். அதுபோல், பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணம் செல்வது மதக் கலவரங்களை தூண்டி விடுவதற்கு தான் என விமர்சித்த அமைச்சர், நட்பாக பழகி வரும் சமூகத்தை கெடுக்கவே இதனை அண்ணாமலை செய்து வருகிறார் என சாடியுள்ளார்.

மேலும், "சந்திராயன் கூட நிலவில் கால் தடத்தை பதித்து விட்டது. ஆனால் மணிப்பூர் வன்முறைக்காக இதுவரை மோடி அங்கு சென்று பார்க்கவில்லை. மத பிரச்சனையை தூண்டும் பாஜக அரசை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் புறக்கணிக்க வேண்டும்" எனவும் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com