ஆதார் இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணும் குழந்தைகளும் மரணம்...!!!

ஆதார் இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணும் குழந்தைகளும் மரணம்...!!!
Published on
Updated on
1 min read

ஆதார் அட்டை இல்லாத காரணத்தால்,  அனுமதி மறுத்த மருத்துவமனை நிர்வாகம். பிரசவத்திற்கு வந்த பெண்ணும் அவருக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளும் பிரசவத்தின் போது இறந்த பரிதாபம்.

கர்நாடகாவில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் பெண் மற்றும் அவரது இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் நடந்துள்ளது.  தகவலின்படி, ஆதார் அல்லது மகப்பேறு அட்டை கிடைக்காததால், அந்த பெண்ணை அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் மரணத்திற்கு வழிவகுத்துள்ளது. 

உயிரிழந்த பெண்ணின் பெயர் கஸ்தூரி.  இவர் பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டில் மற்றொரு பெண்ணுடன் வசித்து வந்துள்ளார்.  பெண்ணின் கணவர் வேலை காரணமாக வேறு இடத்தில் தங்கியுள்ளார்.  கஸ்தூரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை ஆட்டோரிக்ஷாவில் துமகுரு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  ஆனால், ஆதார் மற்றும் மகப்பேறு அட்டை கிடைக்காததால் அந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம், அவரை வீட்டுக்கு திரும்ப அனுப்பியது.

வீடு திரும்பிய கஸ்தூரிக்கு பிரசவ வலி அதிகமாகி ஆண் குழந்தை பிறந்துள்ளது.  ஆனால், இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் போதே கஸ்தூரி  உயிரிழந்தார். அவர் இறந்த சிறிது நேரத்திலேயே அவரது முதல் குழந்தையும் இறந்துவிட்டது.  இந்நிலையில் கஸ்தூரிக்கு ஏற்கனவே ஆறு வயதில் ஒரு பெ குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பணியில் இருந்த மருத்துவரை இடைநீக்கம் செய்ய மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் மஞ்சுநாத் பரிந்துரை செய்துள்ளார்.  இது கடமையை மீறும் செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.  சுகாதார அலுவலரால் இடைநீக்கம் செய்ய இயலாது என்பதால் டாக்டரை இடைநீக்கம் செய்ய துமகுரு மாவட்ட துணை கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com