100வதுமனதின் குரல் நிகழ்ச்சி...இந்தியக் குடிமக்களுக்கு பிரதமர் பாராட்டு...!

100வதுமனதின் குரல் நிகழ்ச்சி...இந்தியக்  குடிமக்களுக்கு பிரதமர் பாராட்டு...!
Published on
Updated on
1 min read

நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு இந்தியக் குடிமக்களையும் பாராட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வோரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் நாட்டு மக்களிடையே உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியின் நூறாவது பதிப்பு இன்று ஒலிபரப்பானது. 

இதில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி விஜயதசமி நாளில் மனதின் குரல்நிகழ்ச்சி தொடங்கியதாக நினைவு கூர்ந்தார். நூறாவது நிகழ்ச்சியை முன்னிட்டு நாட்டு மக்களை வாழ்த்திய பிரதமர், இந்த நிகழ்ச்சியின் மூலம் நேர்மறை எண்ணங்கள் மற்றும் மக்களின் பங்களிப்பை கொண்டாடி வருவதாக கூறினார்.

தான் தொடங்கி வைத்த பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் இயக்கம் மற்றும் மகளுடன்  புகைப்படம் போன்ற இயக்கங்கள் தன்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறினார். பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம் என்று கூறினார். இது  தவிர பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் இயக்கம் மூலம் ஹரியானாவில் பாலின விகிதத்தை உயர்த்தி உள்ளதாக கூறினார்.

சுடுமண் கோப்பைகளைத் தயாரிக்கும் தமிழ்நாட்டின் பழங்குடியினப் பெண்கள் குறித்தும் வேலூரில் உள்ள நாகநதிக்கு புத்துயிர் ஊட்டிய பெண்கள் குறித்தும் மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டதை மகிழ்ச்சியாக கருதுவதாக கூறினார்.

மனதில் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட தூய்மை இந்தியா இயக்கம், அமிர்தகாலப் பெருவிழா , அம்ரித் சாரோவர் உள்ளிட்ட இயக்கங்களை மிகப் பெரிய மக்கள் இயக்கங்கள் நாட்டு மக்களால் வெற்றி பெற்றதாக பெருமிதம் கொண்டார். இல்லம் தோறும் தேசியக் கொடி , மழைநீரை சேமிப்போம் போன்ற இயங்கங்கள் பெரிய மக்கள் இயக்கங்களாக மாற மனதின் குரல் நிகழ்ச்சி தூண்டுகோளாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

நான் என்பதிலிருந்து நாம் என்பதை நோக்கிய பயணமே மனதின் குரல் நிகழ்ச்சி என்று குறிப்பிட்ட பிரதமர், இந்நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் உள்ள இந்திய குடிமக்கள் இணைந்துள்ளதாக கூறினார். இந்தியர்கள் அயல்நாடுகளில் சுற்றுலா செல்லும் முன் இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்களில் குறைந்தபட்சம் 15 இடங்களையாவது கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com