“ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம்.. 700 பேர் கைது!” - ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் திரண்ட ஆயிரக்கணக்கானோர்

அக்டோபர் 2ஆம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக CJP அறிவித்திருந்தது
protest against gyanesh kumar
Published on: 
Updated on: 
2 min read

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) சார்பில் மும்பை சிவாஜி பார்க்கில் இன்று போராட்டம் தொடங்கியுள்ளது. தேர்தல் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர மறுஆய்வு (SIR) தொடர்பான சர்ச்சைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி சிவாஜி பார்க் மற்றும் தாதர் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

CJP நிறுவனர் அபிஜீத் திப்கே தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு மும்பை போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இருந்தபோதிலும் போராட்டத்தை நடத்தப் போவதாக CJP தரப்பு அறிவித்திருந்தது. இதனால் சிவாஜி பார்க் சுற்றுவட்டாரத்தில் கூடுதல் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். போராட்டம் தொடங்கும் முன்பே அந்தப் பகுதியில் போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மும்பை போராட்டத்துக்கு முன்னதாகவே, அக்டோபர் 2ஆம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக CJP அறிவித்திருந்தது. முதற்கட்டமாக மும்பையில் போராட்டத்தை நடத்தும் நிலையில், தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரிலும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இதே நாளில் டெல்லி ஜந்தர் மந்தரில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். AAP டெல்லி தலைவர் சவுரப் பரத்வாஜ், முன்னாள் முதல்வர் அதிஷி, AISA தேசியத் தலைவர் நேஹா போரா உள்ளிட்டோர் தடுத்து வைக்கப்பட்டவர்களில் இடம்பெற்றனர். மொத்தமாக சுமார் 500 பேர் காவல்துறையினரால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் அந்தப் பகுதிக்குள் செல்வதைத் தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். சில மெட்ரோ நிலையங்களிலும் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்காளர் பட்டியல்களின் Special Intensive Revision (SIR) நடவடிக்கையைச் சுற்றி எழுந்துள்ள குற்றச்சாட்டுகளே இந்தப் போராட்டத்தின் முக்கிய பின்னணியாக உள்ளன. தேர்தல் ஆணையத்தின் சில முடிவுகள் தொடர்பாக மற்ற தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியான தகவல்களை சுட்டிக்காட்டி CJP உள்ளிட்ட போராட்டக்காரர்கள் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனக் கோரி வருகின்றனர்.

அதேவேளை, SIR உள்ளிட்ட தேர்தல் தொடர்பான முடிவுகள் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்தால் ஒருமனதாக எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. எனவே, போராட்டக்காரர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும், தேர்தல் ஆணையத்தின் விளக்கமும் தனித்தனியாக கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

மும்பையில் CJP போராட்டமும், டெல்லியில் அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் முன்னெடுத்த போராட்டமும் ஒரே நாளில் நடைபெற்றுள்ளதால், SIR மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதம் தேசிய அளவில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com