
புதுச்சேரியில் எத்தனை பேருக்கு சட்டவிரோதமாக பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களுடன் நாளை நேரில் ஆஜராக அம்மாநில பொதுப்பணித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் சட்டவிரோதமாக பணி நியமனங்கள் நடைபெறுவதாகவும், தற்காலிகமாக பணியாளர்களை நியமித்து பின் அவர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவதாகவும் கூறி, புதுவையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் அய்யாசாமி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது,
இந்த சட்டவிரோதமான நியமனங்களால் படித்து விட்டு, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து , அரசு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
புதுவை பொதுப்பணித்துறையில் 10 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக, முறையற்ற பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுவதால், அரசு உத்தரவை பின்பற்றியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிச்சந்திரன் வாதிட்டார்.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி, விருப்பம் போல் வேண்டப்பட்டவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்குவது என்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும் பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு உரிமையை மறுக்கும் செயல் என்றும் தெரிவித்து, புதுவை பொதுப்பணி துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணி நியமங்களின் தன்மை, எத்தனை பேர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களுடன் நாளை (10ம் தேதி) நேரில் ஆஜராக அம்மாநில பொதுப்பணித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க : ஈபிஎஸ் வழியில் ஓபிஎஸ்...ஸ்டாலினுக்கு நெருக்கடி...!