

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் தப்பிக்க வேண்டும் என்பதற்காக சிலர் வாகனத்தின் நம்பர் பிளேட்டை மறைப்பது, எழுத்துகள் மற்றும் எண்களை மாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற முறைகேடுகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தற்போது புதிய அதிரடி நடவடிக்கையை அறிவித்துள்ளது. வாகனத்தின் பதிவு எண்ணை வேண்டுமென்றே மறைத்தோ, மாற்றியோ சுங்கக் கட்டணத்தைத் தவிர்க்க முயற்சித்தால், இனி அந்தச் சுங்கச்சாவடியின் வழக்கமான கட்டணத்தைவிட ஐந்து மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக 'Multi-Lane Free Flow (MLFF) எனப்படும் தடுப்புகள் இல்லாத சுங்கக் கட்டண வசதி செயல்படும் இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த முறையில் வாகனங்கள் சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. சாலையின் மேலே அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் வாகனத்தின் நம்பர் பிளேட்டையும் FASTag விவரங்களையும் அடையாளம் கண்டு, தானாகவே கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளும். இதனால் வாகனங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நேரம் குறைகிறது.
நம்பர் பிளேட்டை காகிதம் அல்லது வேறு பொருட்களால் மறைப்பது, எண்களை மாற்றுவது, போலியான பதிவு எண்ணைப் பயன்படுத்துவது, FASTag தெரியாதவாறு மறைப்பது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளன. இதனால் வாகனத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுவதுடன், அரசுக்கும் சுங்கக் கட்டண வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வாகனத்தின் முன்புற அல்லது பின்புற நம்பர் பிளேட்டில் திட்டமிட்டு மாற்றம் செய்யப்பட்டு, FASTag விவரமும் கண்டறிய முடியாத நிலையில் இருப்பது உறுதியானால் புதிய அபராத நடவடிக்கை பொருந்தும். இதுபோன்ற செயல் சுங்கக் கட்டணத்தைத் தவிர்க்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதும் முக்கியமான நிபந்தனையாகும். சாதாரணமாக வாகனத்தின் எண் தெளிவாகத் தெரியவில்லை என்பதற்காக மட்டும் தானாகவே ஐந்து மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று இதைப் புரிந்துகொள்ளக் கூடாது.
சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடியின் வழக்கமான கட்டணத்திற்கு மேலாக ஐந்து மடங்கு தொகை அபராதமாக வசூலிக்கப்படும். உதாரணமாக, ஒரு சுங்கச்சாவடியின் வழக்கமான கட்டணம் ரூ.100 என்றால், அதனைத் தவிர்க்க முயன்றது உறுதியான வாகன உரிமையாளர் ரூ.100 கட்டணத்துடன் கூடுதலாக ரூ.500 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதாவது மொத்தம் ரூ.600 செலுத்த நேரிடலாம். இந்த நடவடிக்கை ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள தடுப்புகள் இல்லாத சுங்கச்சாவடிகளுக்கும், எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் இடங்களுக்கும் பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இந்த புதிய சுங்கக் கட்டண முறை படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. குஜராத்தின் சோர்யாசி பகுதியில் 2026 மே 1ஆம் தேதி முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட MLFF முறை, பின்னர் டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. நவம்பர் 27ஆம் தேதியின்படி, மொத்தம் ஒன்பது சுங்கச்சாவடிகளில் இந்த வசதி செயல்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் பரனூர், நெமிலி மற்றும் சென்னைப் பெரும்புதூர் அருகிலுள்ள சென்னசமுத்திரம் ஆகிய இடங்களிலும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணம், அடையாளம் தெரியாத வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுதான். நவம்பர் 21ஆம் தேதி வெளியான தகவலின்படி, அக்டோபர் 21ஆம் தேதி வரை 31.74 லட்சம் வாகனங்கள் தடுப்புகள் இல்லாத சுங்கச்சாவடிகளைக் கடந்துள்ளன. அவற்றில் சுமார் 99,500 வாகனங்கள் அடையாளம் காண முடியாத வகையில் இருந்ததாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, சில வாகனங்களில் நம்பர் பிளேட் அல்லது FASTag மறைக்கப்பட்டிருந்தது அல்லது முறைகேடாக மாற்றப்பட்டிருந்தது. இத்தகைய செயல்கள் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதுடன், சட்டவிரோதப் போக்குவரத்து நடவடிக்கைகளைக் கண்டறிவதிலும் சிக்கலை உருவாக்குகின்றன.
இதைக் கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியையும் அரசு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. வாகனத்தின் தோற்றம், நிறம், அமைப்பு உள்ளிட்ட அடையாளங்களைக் கொண்டு அதைக் கண்டறியும் 'Vehicle Fingerprinting' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், வாகனப் பதிவு விவரங்கள் அடங்கிய VAHAN தரவுத்தளத்துடனும் இந்தத் தொழில்நுட்பம் இணைக்கப்படும். இதன் மூலம் நம்பர் பிளேட்டை மாற்றியிருந்தாலும் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளரைக் கண்டறிய முயற்சி செய்யப்படும். நிலுவையில் உள்ள கட்டணங்களுக்காக மின்னணு அறிவிப்புகளும் அனுப்பப்படும்.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், பதிவு எண்ணைப் போலியாக மாற்றுவது அல்லது நம்பர் பிளேட்டில் முறைகேடு செய்வதற்குத் தனியான அபராத நடவடிக்கைகள் உள்ளன. புதிய ஐந்து மடங்கு சுங்க அபராதம் அதற்கு மேலாக வசூலிக்கப்படுவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் தங்களது நம்பர் பிளேட்டைத் தெளிவாகவும் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட முறையிலும் வைத்திருக்க வேண்டும். FASTag சரியாகச் செயல்படுகிறதா, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வாகனப் பதிவு எண் சரியானதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சுங்கச்சாவடிகளில் நேரத்தை மிச்சப்படுத்தவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தினால், இனி அதிக அபராதத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். சிறிய தொகை சுங்கக் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக நம்பர் பிளேட்டை மறைப்பது, பல மடங்கு பண இழப்பையும் சட்டச் சிக்கல்களையும் ஏற்படுத்தலாம். எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் விதிமுறைகளைப் பின்பற்றி பயணம் செய்வதே பாதுகாப்பானது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.