"அப்பா இறந்துவிட்டார்" சோனியா காந்தியிடம் செய்தியை சொன்ன பிரியங்கா.. பிரதமர் ராஜீவ் கொல்லப்பட்ட இரவில் என்ன நடந்தது?

தனது வாழ்வின் மிக ரகசியமான, அதேசமயம் ஆறா வடுவாக அமைந்த ஒரு துயர அத்தியாயத்தைப் பற்றி சோனியா காந்தி இதில் உருக்கமாக எழுதியிருக்கிறார்.
"அப்பா இறந்துவிட்டார்" சோனியா காந்தியிடம் செய்தியை சொன்ன பிரியங்கா.. அந்த இரவில் என்ன நடந்தது? Belonging புத்தகத்தில் மனம் திறக்கும் சோனியா!
"அப்பா இறந்துவிட்டார்" சோனியா காந்தியிடம் செய்தியை சொன்ன பிரியங்கா.. அந்த இரவில் என்ன நடந்தது? Belonging புத்தகத்தில் மனம் திறக்கும் சோனியா!
Published on: 
Updated on: 
4 min read

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பல சிரமங்களைக் கடந்து தனது நினைவுக்குறிப்பு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். பிளாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ் (Belonging: A Journey of Love) என்ற அந்த புத்தகம் தற்போது மிகப் பெரிய பேச்சு பொருளாக உருவெடுத்துள்ளது.

இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி லண்டனில் ராஜீவ் காந்தியை சந்தித்து காதல்வயப்பட்டது முதல் இந்தியாவின் மிகப் பெரிய கட்சியின் தலைவராக பொறுப்பேற்றது மற்றும் இன்று மற்றொரு சித்தாந்தத்தை எதிர்த்து போராடுவது வரை தனது வாழ்க்கையின் முக்கியமான பகுதிகளை இதில் எழுதியிருக்கிறார்.

அவரது வாழ்க்கையில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியின் இழப்பு, காங்கிரஸ் கட்சியில் நடந்த முக்கிய மாற்றங்கள், வெற்றி - தோல்விகள் என இந்திய அரசியலின் முக்கிய அத்தியாயங்கள் நிறைந்திருப்பதால் இந்த புத்தகம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தனது வாழ்வின் மிக ரகசியமான, அதேசமயம் ஆறா வடுவாக அமைந்த ஒரு துயர அத்தியாயத்தைப் பற்றி சோனியா காந்தி இதில் உருக்கமாக எழுதியிருக்கிறார்.

மே 1991-ல் தமிழ்நாட்டில் நிகழ்ந்த அவரது கணவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் படுகொலை. அந்த தூரதிர்ஷ்ட சம்பவம் நடக்கும்போது, சோனியா காந்தி ஒரு நடத்தர வயது (44) தாய், பிரியங்கா 19 வயது இளம் பெண்.

Sonia Gandhi with Her Book Belonging: A Journey of Live
Sonia Gandhi with Her Book Belonging: A Journey of Live

படுகொலை செய்தி அவரை வந்தடைவாதற்கு முன்பு இருந்த இயல்புநிலையில் இருந்து அந்த பகுதியைத் தொடங்கியுள்ளார். "பிரியங்காவும் நானும் ராஜீவின் தேர்தல் பிரசாரத்தில் இருந்து திரும்பி சில நாட்கள் ஆகியிருந்தன; இருப்பினும் அந்த அலைச்சலின் களைப்பு என்னைவிட்டு அகலவில்லை. ரேபரேலியில் அவரைச் சந்திக்க முடியாமல் போனது. டெல்லி வந்தவர் மீண்டும் புறப்படுவதற்குள் அவரோடு ஒரு நாளாவது கிடைக்காதா என்றிருந்த ஏக்கமும் நிறைவேறவில்லை. பிரியங்கா சில நாட்கள் அங்கே தங்கியிருந்தாள். மே 10 அன்று ரேபரேலியில் தன் தந்தையைச் சந்தித்தது குறித்து அவள் சொன்ன தகவல்கள் என் மனதிலேயே சுழன்று கொண்டிருந்தன. 'அப்பா எவ்வளவு சோர்வாக இருந்தார் தெரியுமா அம்மா? தொடர்ந்து பல நாட்களாக நாடு முழுவதும் இடைவிடாமல் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்' என்று சொல்லி அதிர்ச்சி அடைந்தாள்."

"கட்டிலில் அவர் படுக்கும் பக்கத்தில் போய் மெல்ல சாய்ந்து படுத்துக்கொண்டேன்; அவர் ஊரில் இல்லாத நேரங்களில் எனக்கு ஆறுதல் தரும் ஒரே விஷயம் அதுதான். படுக்கையறை விளக்கு சுவர்களில் நீண்ட நிழல்களைப் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. ஒரு புத்தகத்தைத் திறந்து படிக்கத் தொடங்கினேன். பிரியங்கா அதற்குள் என் அறைக்கதவை சில முறை தட்டிவிட்டுப் போயிருந்தாள். தன் தோழியின் 21-வது பிறந்தநாள் விழாவிற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். அவளது வயதில் உள்ள மற்ற பெண்களைப் போல வெளியில் சென்று பழகும் பழக்கம் அவளுக்குக் கிடையாது. எந்த உடை அணிவது என்று தெரியாமல் விதவிதமாக மாற்றி மாற்றி என் அபிப்ராயத்தைக் கேட்டுக்கொண்டே இருந்தாள். அவள் கதவைத் திறக்கும்போதெல்லாம், நடைபாதையின் மறுகோடியில் இருந்த அவளது அறையிலிருந்து இசை மிதந்து வரும். திடீரென இசை நின்றது; சரி, ஒருவழியாக என்ன உடை உடுத்துவது என்று முடிவுசெய்துவிட்டு வெளியில் புறப்பட்டுவிட்டாள் போலிருக்கிறது என்று நினைத்தேன். அடுத்த கணமே, எனது அறையை நோக்கி நடைபாதையில் யாரோ வேகமாக ஓடிவரும் காலடிச் சத்தம் கேட்டது. வீட்டில் வேறு யாருமே இல்லை, அது நிச்சயமாக அவளாகத்தான் இருக்க முடியும். அவள் நிலைதடுமாறி விழுந்தது போல் சத்தம் கேட்டது; அப்புறம் என் வாசற்படியில் காலடிச் சத்தம் சட்டென்று நின்றது. நான் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, ஏதோவொரு அசம்பாவிதம் என உணர்ந்து பதற்றத்தோடு கவனித்தேன்.

கதவு திறந்ததும் அவள் மெல்ல உள்ளே வந்தாள்; அவளது ஒவ்வொரு அடியும் நிதானமாக இருந்தது. தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ஒருவிதக் கட்டாய அமைதியோடு என் படுக்கையை நோக்கி நடந்து வந்தாள். ஆனால், அவளது மூச்சு மிக வேகமாக, அரைகுறையாக இருந்தது. முகத்தில் ரத்த ஓட்டமே இல்லாமல் வெளுத்துப்போய் இருந்தது; அவள் கண்களில் இதுவரை நான் பார்த்திராத அளவுக்குக் காரிருள் அடர்ந்திருந்தது." என விவரித்துள்ளார்.

தொடர்ந்து பிரியங்கா சொன்ன வார்த்தைகளை இவ்வாறாக நினைவு கூர்ந்துள்ளார், "எனக்கு இப்போதுதான் ஒரு போன் வந்தது. அங்கே வெடிகுண்டு வெடித்திருக்கிறது. அப்பாவைச் சுற்றி இருந்த 12 பேர் இறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள், ஆனால் அப்பாவுக்கு ஒன்றுமில்லை, நலமாக இருக்கிறார் என்கிறார்கள். இது சாத்தியமே இல்லை அம்மா! 12 பேர் இறந்திருந்தால், அப்பாவுக்குக் கண்டிப்பாய்க் காயம் பட்டிருக்கும், அவர் மருத்துவமனையில்தான் இருக்க வேண்டும். நாம் உடனே மதராஸுக்குக் கிளம்ப வேண்டும் மாமா, சீக்கிரம் உடையை மாற்றுங்கள்." என சொன்னதாக எழுதியிருக்கிறார்.

முதலில் பிரியங்கா என்ன சொல்கிறார் என்றே சோனியா காந்திக்கு புரியாமல் இருந்துள்ளது. அந்த தருணம் பற்றி எழுதுகையில், "...அவள் வேகமாகப் பேசினாள், எதுவும் என் மண்டையில் ஏறவில்லை. ஏன் மதராஸ்? ராஜீவ் மதராஸிலா இருக்கிறார்? என்ன வெடிகுண்டு? பிரியங்காவின் வார்த்தைகளை விட, குரலில் உறைந்திருந்த அந்த அச்சுறுத்தும் பயம்தான் என்னை உரைய வைத்தது; அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை என் உள்மனம் உணர்ந்து நடுங்கியது. என்னால் மூச்சுவிடக்கூட முடியவில்லை. நான் எழுந்தேன்; அவள் முன்னோக்கி வந்து என்னை இறுகக் கட்டியணைத்துக் கொண்டாள். என் நெஞ்செலும்புகளை முட்டி மோதிய அவளது இதயத்துடிப்பை என்னால் உணர முடிந்தது."

"பிரியங்கா தொடர்ந்து சொன்னாள், "நான் அலுவலகத்திற்குப் போய் என்னவென்று பார்க்கிறேன். ஜார்ஜ் சார் விசாரிப்பதாகச் சொன்னார், ஆனால் அவர் திரும்பி அழைக்கவுமில்லை, போனையும் எடுக்கவில்லை." (இங்கே குறிப்பிடப்படும் ஜார்ஜ் என்பவர் ராஜீவ் காந்தியின் தனிச்செயலாளரான வின்சென்ட் ஜார்ஜ்; இவர் பின்னாள்களில் சோனியா காந்தியுடனும் பணியாற்றினார்). ...அவள் திரும்பியபோது, அவளது முகத்தில் ஒரு இறுதியான முடிவைக் கண்டேன், அதை நான் உடனடியாய் அடையாளம் கண்டுகொண்டேன். அரைகுறை வெளிச்சமிருந்த அந்த அறையில் அவள் எனக்கு முன்னால் போய் நின்றாள். 'அப்பா இறந்துவிட்டார்' என்றாள். அது ஒரு கெட்ட கனவாக இருக்கக் கூடாதா, நான் அதிலிருந்து விழித்துக்கொள்ள மாட்டேனா என்ற ஏக்கத்தில் அவளது கண்களைப் பார்த்தேன். அவளோ, என் பயங்கரத்தைப் பிரதிபலித்தபடி, தன் கூர்மையான பார்வையால் என் கண்களை ஊடுருவிப் பார்த்தாள்."

என் மகளின் கைகளிலேயே நான் சுருண்டு விழுந்தேன். 'நான் அவரோடு போயிருக்க வேண்டும், ஏன் நான் அவரோடு போகாமல் போனேன்?' என்று திரும்பத் திரும்பக் கதறி அழுதேன். அவள் எதுவும் பேசவில்லை. நம்பிக்கையின்மையோடு, ஏதோவொரு மெல்லிய நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு, நானே ஜார்ஜ் சாருக்கு போன் செய்தேன். 'உண்மையை மட்டும் சொல்லுங்கள், அது நிஜம்தானா?' அவரது குரல் தழுதழுத்தது. 'ஆம் அம்மா... அது உண்மைதான். சாஹப் இனி நம்மிடம் இல்லை.'

என் உலகமே இருண்டுவிட்டது போலவும், பெரும் இருள் என்னை முழுமையாக விழுங்கிவிட்டது போலவும் உணர்ந்தேன்."

"பிரியங்கா என்னை அமரவைத்து, ஆறுதல்படுத்த முடியாமல் கதறி அழுத என்னை இறுகக் அணைத்துக்கொண்டாள். என் ராஜீவ் இறந்துவிட்டார். அவர் நம்மைவிட்டுப் போய்விட்டார். அந்த அழகான முகத்தை நான் இனி ஒருபோதும் பார்க்க முடியாது, அவர் என்னைக் கட்டியணைப்பதை இனி உணர முடியாது, அவரது அணைப்ப தரும் பாதுகாப்பை இனி நான் அறியப்போவதில்லை. நான் செத்துவிட விரும்பினேன். அவர் இல்லாத இந்த உலகத்தில் வாழ எனக்கு விருப்பமே இல்லை." என தனது மனப் போராட்டத்தை விளக்கியுள்ளார்.

ராஜீவின் உடலைப் பார்க்க வேண்டும் என்ற தனது தணியாத தவிப்பைப் பற்றியும் சோனியா எழுதியுள்ளார்: "...ராஜீவைப் பார்க்க வேண்டும் என்ற தீவிரமான விருப்பம் எனக்குள் எழுந்தது. நான் அவரைப் பார்த்தே ஆக வேண்டும். ஆனால் என்னை அனைவரும் தடுத்துக்கொண்டே இருந்தனர். 'இப்போது வேண்டாம் அம்மா, இப்போது வேண்டாம். பொறுமையாக இருங்கள், இன்னும் கொஞ்ச நேரம் கழித்துச் செல்லலாம்.' எனக்கு திடீரென நினைவுக்கு வந்தது—ஆம், எனக்கு உறுதியாகத் தெரியும்—ராஜீவ் தன் கண்களைத் தானம் செய்திருந்தார். அவரது தாயாரும் அப்படியே செய்திருந்தார், ஆனால் அந்தத் துயரமான நேரத்தில் எங்களால் அதை நினைவில் கொள்ள முடியாமல் போயிற்று. இப்போது நான் அவரைப் பார்த்தே ஆக வேண்டும், இனி எந்தச் சாக்கும் கேட்க மாட்டேன். அவரது விருப்பத்தை யாராவது ஒருவரிடம் தெரிவித்தாக வேண்டும். நெருக்கடி நேரங்களில் எப்போதும் எங்களுடன் இருக்கும் எங்கள் குடும்ப மருத்துவரைப் பற்றி நினைத்தேன். 'டாக்டர் மாத்தூர் இங்கே இருக்கிறாரா?' என்று கேட்டேன். 'நான் அவரிடம் அவசரமாகப் பேச வேண்டும், இப்போதே... அது மிகவும் முக்கியம்.' என்றேன்.

அந்த மருத்துவர் சொன்ன கசப்பான பதில் - 'கண்களா? அட என்ன பேசுகிறீர்கள் அம்மா, அங்கே எதுவுமே மிஞ்சவில்லை, எதுவுமே இல்லை!' (Aankhen? Arre kya baat karte bo, kuchb nabin bacha bai, kucch nabin!). அது என் வயிற்றில் யாரோ ஓங்கி மிதித்தது போல் இருந்தது; எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. என்னால் மூச்சுவிட முடியவில்லை... பிரியங்கா என்னை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். அந்த கொடூரமான பதில் தந்த ரண வேதனை, என் அன்புக்குரியவரின் மரணத்தின் கொடூரத்தை என் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியது." என எழுதியுள்ளார்.

இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பிய ராஜீவ் காந்தியின் முடிவுக்குப் பழிவாங்கும் வகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதியால் அவர் படுகொலை செய்யப்பட்டார். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்காக தமிழ்நாடு, ஸ்ரீபெரும்புதூருக்கு வந்திருந்தபோது இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது சோனியாவின் நினைவுக்குறிப்புகள் மூலமாக மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.