ஆன்லைன் மோசடிக்கு ஆப்பு வைக்கும் ரிசர்வ் வங்கி! பெரிய தொகை அனுப்புகிறீர்களா? இனி புதிய திட்டம்!

இந்த வசதியைப் பயன்படுத்துவது கட்டாயமல்ல. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆன்லைன் மோசடிக்கு ஆப்பு வைக்கும் ரிசர்வ் வங்கி! பெரிய தொகை அனுப்புகிறீர்களா? இனி புதிய திட்டம்!
Published on: 
Updated on: 
2 min read

இன்றைய காலகட்டத்தில் பணம் அனுப்புவது முதல் பொருட்கள் வாங்குவது வரை அனைத்தும் செல்போன் மூலமாகவே நடைபெறுகின்றன. சில நொடிகளில் ஆயிரக்கணக்கான ரூபாயை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அனுப்ப முடிகிறது. இந்த வசதி மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியிருந்தாலும், இணையவழி பண மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போலியான வங்கி அழைப்புகள், குறுஞ்செய்திகள், இணைப்புகள் மற்றும் மோசடி செயலிகள் மூலம் பலர் தங்களது சேமிப்புப் பணத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில், டிஜிட்டல் பண மோசடிகளைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி புதிய பாதுகாப்பு விதிமுறைகளை முன்மொழிந்துள்ளது.

இந்தப் புதிய திட்டத்தின் முக்கிய அம்சமாக, பெரிய தொகையைப் பணமாக அனுப்பும்போது வாடிக்கையாளர் ஏற்கெனவே தேர்வு செய்து வைத்திருக்கும் நம்பகமான ஒருவரிடம் ஒப்புதல் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு 'Trusted Person Mechanism' என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர் அல்லது நம்பிக்கைக்குரிய வேறு ஒருவரைத் தேர்வு செய்து வங்கியில் பதிவு செய்யலாம். குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் அனுப்பும்போது அந்த நபருக்கும் தகவல் அனுப்பப்படும்.

உதாரணமாக, ஒருவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2 லட்சம் அனுப்புவதற்கு ஒரு வரம்பை நிர்ணயித்திருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த வரம்பைத் தாண்டி பணம் அனுப்ப முயற்சிக்கும்போது, அவர் தேர்வு செய்த நம்பகமான நபருக்கு எச்சரிக்கைச் செய்தி செல்லும். அதில் அனுப்பப்படும் தொகை, பணம் பெறுபவரின் விவரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும். அந்த நபர் ஒரு மணி நேரத்திற்குள் பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர் அனுமதி அளிக்கவில்லை என்றாலோ அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிலளிக்கவில்லை என்றாலோ அந்தப் பரிவர்த்தனை தானாகவே ரத்து செய்யப்படும்.

இந்த வசதியைப் பயன்படுத்துவது கட்டாயமல்ல. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், ஒப்புதல் அளிக்கும் நபர் பணப் பரிவர்த்தனைக்குப் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை. அவருடைய பணி, பரிவர்த்தனை உண்மையானதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான கூடுதல் பாதுகாப்பை வழங்குவது மட்டுமே. இந்த வசதி குறிப்பிட்ட வரம்புக்கு மேலான நேரடி மற்றும் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களுக்குப் பொருந்தும். ஆனால், UPI பணப் பரிவர்த்தனைகள், கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கான பணம் செலுத்துதல் மற்றும் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான பணப் பரிவர்த்தனைகளுக்கு இது பொருந்தாது.

வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ள முக்கியமான வசதி 'Stop Switch' ஆகும். ஒருவருடைய வங்கிக் கணக்கில் மோசடி நடப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டால், இந்த வசதியைப் பயன்படுத்தி கணக்கிலிருந்து வெளியேறும் பணப் பரிவர்த்தனைகளை உடனடியாகத் தடுக்க முடியும். இதன் மூலம் புதிய பணப் பரிவர்த்தனைகள், புதிய கட்டண அனுமதிகள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளில் புதிய UPI பதிவுகள் ஆகியவற்றை முடக்க முடியும். வங்கிக் கிளைகள், ஏடிஎம்கள், இணைய வங்கி வசதி, மொபைல் செயலி மற்றும் தொலைபேசி வழி வங்கி சேவைகள் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.

இந்த வசதியைச் செயல்படுத்தினால் வங்கிக் கணக்கிற்கு வரும் பணம் தடுக்கப்படாது. ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மாதாந்திர கட்டணங்கள், கடன் தவணைகள் மற்றும் வங்கி சார்பில் மேற்கொள்ளப்படும் சில பணப் பிடித்தங்களும் தொடர்ந்து நடைபெறும். மீண்டும் பணப் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதற்கு கூடுதல் அடையாளச் சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் தேவைப்படும்.

வாடிக்கையாளர்கள் தங்களது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வசதிகளையும் தாங்களே கட்டுப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். எந்தெந்த வழிகளில் பணம் அனுப்ப அனுமதிக்க வேண்டும், ஒரு நாளில் அதிகபட்சமாக எவ்வளவு பணம் அனுப்பலாம், குறிப்பிட்ட நபருக்கு எவ்வளவு தொகை அனுப்பலாம் போன்ற வரம்புகளை அமைக்க முடியும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் முன்பணம் செலுத்தப்பட்ட அட்டைகளிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனைகள், ஏடிஎம் பயன்பாடு, கடைகளில் பணம் செலுத்துதல் மற்றும் இணையவழி வாங்குதல் போன்றவற்றுக்குத் தனித்தனியாகக் கட்டுப்பாடுகளை அமைக்க முடியும்.

புதிய வங்கிக் கணக்குகளைத் தொடங்கும்போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வசதிகள் ஆரம்பத்தில் முடக்கப்பட்டிருக்கும் என்றும், வாடிக்கையாளரின் ஒப்புதலுக்குப் பிறகே அவை செயல்படுத்தப்படும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், புதியதாகச் செயல்படுத்தப்படும் சில டிஜிட்டல் வசதிகளுக்கு முதல் 24 மணி நேரத்தில் வங்கியே குறிப்பிட்ட பணப் பரிவர்த்தனை வரம்பை நிர்ணயிக்கும்.

மற்றொரு முக்கியமான மாற்றமாக, வங்கிகளின் பொறுப்புகளும் விரிவுபடுத்தப்பட உள்ளன. பல அடுக்கு பாதுகாப்புச் சரிபார்ப்புகளை வழங்கத் தவறுவது, மோசடி எச்சரிக்கைகளைச் சரியான நேரத்தில் அனுப்பாதது, வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காதது போன்றவை வங்கியின் அலட்சியமாகக் கருதப்படலாம். மேலும், வங்கியின் பாதுகாப்பு அமைப்புகளில் ஏற்படும் கோளாறுகள், ஊழியர்கள் அல்லது சேவை வழங்குநர்களின் துணையுடன் நடைபெறும் மோசடிகள் போன்றவற்றுக்கும் வங்கிகள் பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவாகலாம்.

இந்தப் புதிய விதிமுறைகள் தற்போது வரைவு முன்மொழிவுகளாகவே உள்ளன. இவை நடைமுறைக்கு வந்தால் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்களுக்கு அதிக பாதுகாப்பும் கட்டுப்பாடும் கிடைக்கும். குறிப்பாக, இணையவழி மோசடிகளால் தங்களது வாழ்நாள் சேமிப்பை இழக்கும் அபாயத்தில் இருக்கும் முதியவர்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளைப் புதிதாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதிகள் உதவக்கூடும். தொழில்நுட்ப வளர்ச்சியுடன் மோசடிகளும் அதிகரித்து வரும் நிலையில், வங்கிக் கணக்கின் பாதுகாப்பை வாடிக்கையாளர்களின் கைகளிலேயே வழங்கும் முயற்சியாக இந்தப் புதிய திட்டம் பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.