"தனக்கென ஒரு வாழ்க்கையை தேடிய பெண்..." - புதிய நகரம் கற்றுக்கொடுத்த எதிர்பாராத பாடமும், ‘வீடு’ பற்றிய மாறிய பார்வையும்!

சாக்ஷி என்ற அந்த பெண், கடந்த மூன்று ஆண்டுகளாக தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை நினைவுகூர்ந்து எழுதியுள்ளார்.
Sakshi Bengaluru journey
Sakshi Bengaluru journey
Published on: 
Updated on: 
2 min read

சில நேரங்களில் வாழ்க்கையில் நமக்கு மிகவும் தேவையான மாற்றம், நாம் எதிர்பார்க்காத இடத்தில்தான் தொடங்குகிறது. பழைய வாழ்க்கையை விட்டு வெளியேறி, முற்றிலும் புதிய சூழலில் தனியாக ஒரு வாழ்க்கையை உருவாக்குவது எளிதான விஷயம் அல்ல. ஆனால், அப்படியொரு பயணத்தை எதிர்கொண்ட பெண் ஒருவர், புதிய நகரம் தனக்கு எப்படி வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வாய்ப்பை கொடுத்தது என்பதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவருடைய அனுபவம், ‘வீடு’ என்றால் என்ன என்ற கேள்வியையும் புதிதாக சிந்திக்க வைத்துள்ளது.

சாக்ஷி என்ற அந்த பெண், கடந்த மூன்று ஆண்டுகளாக தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை நினைவுகூர்ந்து எழுதியுள்ளார். புதிய இடத்துக்கு அவர் சென்றது வேலை அல்லது பெரிய வாய்ப்பை தேடி மட்டும் அல்ல. ஒரு கட்டத்தில் தனக்கு பாதுகாப்பான இடமும், பழைய வாழ்க்கையிலிருந்து விலகி புதிதாக தொடங்கும் வாய்ப்பும் தேவைப்பட்டதாக அவர் கூறியுள்ளார். தனது சொந்த ஊரில், பிறர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி வாழ வேண்டிய சூழல் இருந்ததாக சாக்ஷி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, குடும்பத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஒரு ‘சரியான மகளாக’ இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவரை மனதளவில் மிகவும் பாதித்ததாக அவர் கூறியுள்ளார். தன்னைப் பற்றிய அதிகமான எதிர்பார்ப்புகள் தினசரி வாழ்க்கையையே சுமையாக மாற்றியதாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.

அந்த நிலையில், எல்லாவற்றையும் புதிதாக தொடங்கும் முடிவை எடுத்தார். தோல்வி ஏற்பட்டாலும் மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு ஒரு இடம் இருக்காது என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார். இருந்தாலும், தனக்கென ஒரு புதிய அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவரை முன்னோக்கி நகர்த்தியது. அவரது வாழ்க்கையில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திய நகரம் பெங்களூரு. அங்கு சென்றபோது ஆரம்பத்தில் எல்லாமே சவாலாக இருந்தாலும், காலப்போக்கில் அந்த நகரம் அவருடைய எண்ணங்களையும் வாழ்க்கையைப் பார்க்கும் முறையையும் மாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தோல்வியடைவதற்கும், மீண்டும் முயற்சி செய்வதற்கும், சில நேரங்களில் வேகமாக முன்னேறுவதற்கும், வேறு சில நேரங்களில் நிதானமாக இருப்பதற்கும் அந்த சூழல் அவருக்கு இடம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களுக்குள் இருந்தே தன்னைப் பற்றி பல புதிய விஷயங்களை தெரிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். முக்கியமாக, தன்னை எப்போதும் தனியாக போராடும் ஒருவராக நினைத்துக் கொண்டிருந்த நிலை மாறியதாக சாக்ஷி கூறியுள்ளார்.

எதிர்பாராத நேரங்களில் சந்தித்த நண்பர்கள், அறிமுகமானவர்கள் என பலர் தனது வாழ்க்கையில் முக்கியமானவர்களாக மாறியதாக அவர் தெரிவித்துள்ளார். தன்னை ஆதரிக்கும் ஒரு பெரிய சமூகமே உருவாகிவிட்டது என்ற உணர்வு, தனிமையை குறைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் தனது வாழ்க்கையில் இருந்த வெறுமையை எப்படி நிரப்புவது என்று யோசித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் பின்னர் அது வெறுமை அல்ல, தன்னால் நிரப்பப்பட வேண்டிய ஒரு இடம் என்பதை புரிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். அந்த எண்ணமே தனது வாழ்க்கையைப் பற்றிய பார்வையை மாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார். ‘வீடு’ என்பதற்கு நான்கு சுவர்களும் ஒரு முகவரியும் மட்டும் தேவையில்லை என்பதையும் அவரது அனுபவம் உணர்த்துகிறது.

நமக்கு பிடித்த ஒரு மரத்தை பார்த்து ரசிப்பது, மனதில் இருக்கும் கண்ணீரை தயக்கமின்றி வெளியே விடுவது, காரணமே இல்லாமல் சிரிப்பது, நம்மை அமைதியாக வைத்திருக்கும் ஒரு தினசரி பழக்கம், அன்பான மனிதர்களுடன் செலவிடும் நேரம் என பல சிறிய விஷயங்களிலும் வீட்டு உணர்வு கிடைக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

புதிய இடத்துக்கு சென்றவுடன் எல்லாம் சரியாகிவிடாது. தனிமை, தோல்வி, பயம், எதிர்பார்ப்பு என பலவற்றை கடந்து செல்ல வேண்டியிருக்கும். ஆனால், வாழ்க்கையை மாற்றிக்கொள்ள நமக்கே ஒரு வாய்ப்பு கொடுக்கத் துணிவது முக்கியம் என்பதே சாக்ஷியின் அனுபவம் சொல்லும் செய்தியாக உள்ளது.

ஒரு நகரம் நமக்கு வீடு கொடுப்பதைக் காட்டிலும், நம்மை நாமே மீண்டும் கண்டுபிடிக்க உதவும்போது அது உண்மையான ‘வீடு’ போல மாறிவிடுகிறது. வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பழைய அடையாளத்தை விட்டுவிட்டு புதிதாக தொடங்க நினைப்பவர்களுக்கு, சாக்ஷியின் அனுபவம் நம்பிக்கையளிக்கும் ஒரு சிறிய நினைவூட்டலாக இருக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com