கனத்த இதயங்களுக்கு மத்தியில் முதலமைச்சரானவரே ஷிண்டே:

கனத்த இதயங்களுக்கு மத்தியில் முதலமைச்சரானவரே ஷிண்டே:
Published on
Updated on
1 min read

மிகவும் கனத்த இதயத்துடன் ஏக்நாத் ஷிண்டேவை மகாராஷ்டிர  முதலமைச்சராக ஆக்கினோம் என, மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அவரது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பெரும்பான்மை இழந்த உத்தவ் தாக்கரே, நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தோல்வியுற்று, முதலமைச்சர்  ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து, சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். இதனால் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்பார்கள் என, முதலில் தகவல் வெளியாகியது. ஆனால் அதிரடி திருப்பமாக, மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக, ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற நிலையில் துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னவிஸ் பதவி ஏற்றார்.

சந்திரகாந்த் பாட்டில் அதிருப்தி:

மிகவும் நெருக்கடியான சூழலில் வலுவான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு இருந்தது. நாங்கள் பட்னாவிஸ் தான் முதலமைச்சர் என்று நம்பிக்கையோடிருந்தோம். ஆனால் பட்னாவிஸ் மற்றும் பாஜக தலைமை இணைந்து கனத்த இதயத்துடன் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்க முடிவு செய்தனர். இந்த முடிவு எங்களுக்கும் மகிழ்ச்சியைத் தரவில்லை. எங்களது கவலையை மறைத்துக் கொண்டு தான் ஷிண்டேவை முதலமைச்சராக ஏற்றோம்” என்று நேற்று நடந்த பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய சந்திரகாந்த் பாட்டில், கூறியுள்ளார்.

 தேவேந்திர பட்னவிஸ் விளக்கம்:

சந்திரகாந்த் பாட்டில் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த தேவேந்திர பட்னாவிஸ், “சந்திரகாந்த் பாட்டிலின் கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்ற ஆதங்கத்தை மட்டுமே அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த முடிவு திடீரென்று எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அனைவரோடும் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்துடனே இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com