இமயமலையில் திடீர் பனிப்பொழிவு… மாயமான 6 இந்திய சுற்றுலாப் பயணிகள்! ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை தீவிரம்

இரண்டு பெண்கள், நான்கு ஆண்கள் என மொத்தம் ஆறு பேர் அடங்கிய இந்தக் குழுவைத் தேடும் பணியில் நேபாள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Indian trekkers missing in Nepal
Indian trekkers missing in Nepal
Published on: 
Updated on: 
2 min read

இயற்கை அழகை ரசிப்பதற்காக மலைப்பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு சில நேரங்களில் வானிலை மிகப்பெரிய சவாலாக மாறிவிடுகிறது. அந்த வகையில், இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவால் சுற்றுலா சென்ற ஆறு இந்தியர்கள் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பெண்கள், நான்கு ஆண்கள் என மொத்தம் ஆறு பேர் அடங்கிய இந்தக் குழுவைத் தேடும் பணியில் நேபாள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடுமையான பனிப்பொழிவு, தகவல் தொடர்பு வசதி இல்லாமை, கரடுமுரடான மலைப்பாதைகள் எனப் பல தடைகள் மீட்புப் பணியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

நேபாளத்தில் அமைந்துள்ள ஷே-போக்சுண்டோ ஏரியைப் பார்ப்பதற்காக இந்த ஆறு இந்தியர்களும் மலையேற்றப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த ஏரி அந்நாட்டின் மிக ஆழமான ஏரியாக அறியப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த ஏரியைப் பார்ப்பதற்காகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்.

இந்தியாவைச் சேர்ந்த ஆறு பேரும் டோல்போ புத்தா கிராமப்புற நகராட்சியின் 4 மற்றும் 8ஆவது வார்டு பகுதிகளில் இருந்து ஏரியை நோக்கிப் பயணம் செய்துள்ளனர். அவர்கள் கடைசியாக ஷே-போக்சுண்டோ கிராமப்புற நகராட்சிக்கு உட்பட்ட நும்லா கணவாய் மற்றும் பக்லா கணவாய் பகுதிகளில் காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு அவர்களுடன் எந்தத் தொடர்பும் கிடைக்கவில்லை.

இமயமலைப் பகுதிகளில் திடீரென கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகிய 'அர்னாப்' புயலின் தாக்கத்தால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் வழிகாட்டிகள் சந்தேகிக்கின்றனர். பனிப்பொழிவு அதிகரித்ததால் மலைப்பாதைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளன. இதனால் மலையேற்றம் மேற்கொள்வது மட்டுமின்றி, அந்தப் பகுதிகளில் இருந்து மீண்டும் திரும்புவதும் மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது.

உள்ளூர் மக்கள் மோசமான வானிலை குறித்து முன்கூட்டியே சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அந்தக் குழுவினர் தங்களது பயணத்தைத் தொடர்ந்துள்ளனர். உயரமான மலைப்பகுதியில் இருந்து ஃபோக்சுண்டோ ஏரியை நோக்கித் திரும்பும்போது அவர்கள் பனியில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

டோல்பா மாவட்டத்தின் தலைமை மாவட்ட அதிகாரி ஜுனு ஹமால், சுற்றுலாப் பயணிகள் திரும்பும் வழியில் சிக்கியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அதேபோல், மலைப்பாதைகளில் கைப்பேசி தொடர்பு வசதி இல்லாததால் அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஷே-போக்சுண்டோ கிராமப்புற நகராட்சித் தலைவர் தவா சாம்துக் குருங் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆறு பேரையும் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நேபாள காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளர் அனில் ராஜ் கிரி, சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொள்ள முடியாத நிலை தொடர்வதாகக் கூறியுள்ளார். மீட்புப் பணிக்காக ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நேபாள ராணுவக் குழுவும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதிகமான பனிப்பொழிவு, கடினமான மலைப்பாதைகள் மற்றும் கைப்பேசி தொடர்பு வசதி இல்லாதது போன்ற காரணங்களால் மீட்புக் குழுவினர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மாயமானவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள், அவர்களின் தற்போதைய உடல்நிலை எப்படி உள்ளது என்பதைக் கண்டறிய முடியாத நிலை நீடிக்கிறது. மேல் டோல்போ பகுதியில் மொத்தம் 244 சுற்றுலாப் பயணிகள் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 149 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். 44 பேர் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பில் (SAARC) இடம்பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள். மேலும் 51 பேர் பிற வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆவர். மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு ஆபத்தான மலைப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும் என்றும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஷே-போக்சுண்டோ ஏரிப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2082/83ஆம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் மட்டும் 4,882 பேர் இந்த ஏரியைப் பார்வையிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இயற்கை அழகை ரசிக்கும் ஆர்வத்தில் மலையேற்றம் மேற்கொள்பவர்கள், வானிலை எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு முக்கியமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது. மாயமான ஆறு இந்தியர்களும் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்பதே அவர்களது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் நிலை குறித்த அடுத்தகட்டத் தகவல்களை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.