பிரதமர் மோடியின் வேண்டுகோள்... 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்! மத்திய அரசு அளித்த உறுதி என்ன?

NEET வினாத்தாள் கசிவு தொடர்பாக உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது
Sonam Wangchuk
Published on
Updated on
2 min read

கல்வி சீர்திருத்தங்கள், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகளுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் ஜந்தர் மந்தர் போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 26 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

உடல்நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள மெடாண்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனம் வாங்சுக், மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் முன்னிலையில் பழச்சாறு அருந்தி தனது 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார். இந்த நிகழ்வின் போது அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ மற்றும் லே-லடாக் உச்ச அமைப்பின் நிர்வாகிகளும் உடன் இருந்தனர். உண்ணாவிரதத்தை முடித்த பிறகு சமூக வலைதளத்தில் பதிவிட்ட வாங்சுக், "மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் லே-லடாக் உச்ச அமைப்பின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் 26 நாட்களுக்குப் பிறகு எனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதத்தை முடிப்பதற்கு முன்பு மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை வாசித்துக் காட்டினார். அதில், டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் பங்கேற்றவர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உறுதி அளிக்கப்பட்டது. மேலும், வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு எதிராக கல்வித் துறையில் தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், போட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சமீபத்திய NEET வினாத்தாள் கசிவு தொடர்பாக உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் அரசு சாதகமாக பரிசீலித்து வருவதாக கூறப்பட்டது.

சோனம் வாங்சுக் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது வைத்து செய்தியை தெரிவித்துள்ளார். "மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி உடல்நலத்தை மீட்டுக் கொள்ள வேண்டும். அவர் விரைவில் பழைய உடல்நலத்தை மீண்டும் பெற வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்" என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 28-ஆம் தேதி தொடங்கிய இந்த உண்ணாவிரதத்தின் போது சோனம் வாங்சுக் சுமார் 11 கிலோ எடையை இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கடந்த வாரம் அவர் சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கும் தனது உண்ணாவிரதத்தை முடிக்க மறுத்தார். அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ, டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியதைத் தொடர்ந்து, நீதிமன்ற அனுமதியுடன் அவர் மெடாண்டா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

நீண்டகால பேச்சுவார்த்தை மற்றும் நாட்டில் வன்முறை ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தைக் கருத்தில் கொண்டே உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்ததாக சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவான விளக்கத்தை தனியாக காணொளி மூலம் வெளியிடுவதாகவும், மக்கள் அமைதியை கடைப்பிடித்து எந்தவித வன்முறைக்கும் இடமளிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்திருந்தாலும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் போராட்டக்காரர்கள் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கல்வித்துறை செயலாளரை பதவியில் இருந்து நீக்கியதுடன், இத்தகைய வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

லடாக்கைச் சேர்ந்த கல்வியாளர், பொறியாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான சோனம் வாங்சுக், SECMOL கல்வி இயக்கத்தின் இணை நிறுவனர் ஆவார். லடாக்கில் நீர் பற்றாக்குறைக்கு தீர்வாக உலகப் புகழ்பெற்ற "பனி ஸ்தூபா" தொழில்நுட்பத்தை உருவாக்கியவர். மேலும், பாலிவுட்டின் '3 Idiots' திரைப்படத்தில் இடம்பெற்ற புன்சுக் வாங்டு கதாபாத்திரத்திற்கு அவருடைய கல்வி தத்துவமே முக்கிய உந்துதலாக இருந்ததாக பரவலாகக் கூறப்படுகிறது. 26 நாட்கள் நீடித்த இந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், கல்வி சீர்திருத்தங்கள், வினாத்தாள் கசிவுகள் மற்றும் மாணவர்களின் உரிமைகள் தொடர்பான விவாதம் நாடு முழுவதும் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com