மக்கள் தொகை குறைந்துவிட்டது என்று கூறி நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் சதிச்செயலை மத்திய பாஜக அரசு அரங்கேற்ற முயல்வதாக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளா்.
தஞ்சாவூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 'தாய் வீட்டில் கலைஞர்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். தொடா்ந்து மேடையில் பேசிய அவா், திராவிட கட்சியும், திமுகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்றாா் அண்ணா, ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றாா் கருணாநிதி, தன்னை பொறுத்தவரை திகவும், திமுகவும் உயிரும், உணர்வும் போன்றது என்றாா்.
தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிய, தன்னிறைவு பெற்ற மாநிலமாக உயர வேண்டும். இந்திய ஒன்றியத்தின் ஆட்சி கருத்தியலாக கூட்டாட்சி கருத்தியல் மலர வேண்டும் என தொிவித்த மு.க.ஸ்டாலின் அத்தகைய கூட்டாட்சி கருத்தியலைக் கொண்ட இந்தியாவை உருவாக்கவே INDIA கூட்டணியை அமைத்துள்ளதாக கூறினாா்.
தொடா்ந்து பேசிய முதலமைச்சா் INDIA கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல, அது கொள்கை கூட்டணி எனவும், தேர்தல் வெற்றியை மட்டும் கணக்கில் கொண்டு கூட்டணியை உருவாக்கவில்லை. அந்த வெற்றிக்குப் பின்னால் அமையப் போகும் ஆட்சியில் கோலோச்ச வேண்டிய கொள்கைகளை மனதில் வைத்தே செயல்படுவதாக கூறினாா்.
மேலும் பேசிய அவா் மக்கள் தொகை குறைந்துவிட்டது என்று கூறி நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் சதிச்செயலை மத்திய பாஜக அரசு அரங்கேற்ற முயல்வதாக குற்றம்சாட்டினாா்.