

இந்தியப் பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. உலக அளவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் சுமார் 2,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடும் மிக முக்கியமான 24,000 புள்ளிகளுக்குக் கீழ் சரிந்துள்ளதால், சந்தையில் வர்த்தகம் செய்யும் பலருக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 105 டாலர் என்ற நிலையைத் தாண்டியுள்ளது இந்த வீழ்ச்சிக்கு முதன்மையான காரணமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் சூழல், உலக நாடுகளின் எரிசக்தி விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும் பகுதியை இறக்குமதி செய்வதால், சர்வதேச விலை உயர்வு நேரடியாக நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளைத் தொடர்ந்து விற்பனை செய்து வருவதால் சந்தை முடங்கியுள்ளது.
வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் இன்று மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக எஸ்பிஐ, யூனியன் வங்கி மற்றும் கனரா வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் சுமார் 6 சதவீதம் வரை சரிந்துள்ளன. இது தவிர ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிகளும் தப்பவில்லை. வங்கித்துறையைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் மற்றும் உலோகத்துறை பங்குகளும் கடும் விற்பனை அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. பங்குச்சந்தை நிபுணர்களின் கருத்துப்படி, சந்தையில் நிலவும் இந்த அதிரடி வீழ்ச்சி காரணமாக முதலீட்டாளர்களின் பல லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு சில மணி நேரங்களிலேயே கரைந்து போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோலிய நிறுவனங்களான பிபிசிஎல் மற்றும் ஹெச்பிசிஎல் ஆகியவற்றின் பங்குகளும் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. எண்ணெய் விலை உயர உயர, இந்தப் பொதுத்துறை நிறுவனங்களின் லாப வரம்பு குறையும் என்பதால் முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளைக் கைவிட்டு வருகின்றனர். போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவினாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதால் இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இன்று ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.31 என்ற வரலாற்றுச் சரிவை எட்டியுள்ளது.
சர்வதேச அளவில் ஜப்பான் மற்றும் தென் கொரியப் பங்குச்சந்தைகளும் இன்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. ஆசியச் சந்தைகளில் நிலவும் இந்த பலவீனமான போக்கு இந்தியச் சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் பங்குகளான மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் 3 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளன. சந்தையின் ஏற்ற இறக்கத்தைக் குறிக்கும் 'இந்தியா விக்ஸ்' குறியீடு 20 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது, இது முதலீட்டாளர்களிடையே நிலவும் உச்சகட்ட பயத்தை வெளிப்படுத்துகிறது. தற்போதைய சூழலில் சந்தை எப்போது மீண்டு வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அடுத்த சில நாட்களுக்குப் பங்குச்சந்தை இதேபோன்ற நிலையில் இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தங்கள் அல்லது கச்சா எண்ணெய் விலை குறையும் பட்சத்தில் மட்டுமே சந்தையில் மீண்டும் ஒரு நிலையான போக்கு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண முதலீட்டாளர்கள் இத்தகைய இக்கட்டான சூழலில் அவசரப்பட்டு பங்குகளை விற்காமல், சந்தையின் போக்கை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போதைய உலகளாவிய நெருக்கடி, இந்தியாவின் வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கும் என்பது இனிவரும் நாட்களில் தான் தெளிவாகத் தெரியவரும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்