மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் சுவேந்து அதிகாரி? வெள்ளிக்கிழமை நடக்கும் மெகா மீட்டிங்கில் முடிவு!

மம்தாவின் கோட்டையான பவானிப்பூரிலேயே அவரைப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து
Suvendu Adhikari
Published on
Updated on
2 min read

மேற்கு வங்க அரசியலில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. மம்தா பானர்ஜியின் நீண்ட கால ஆட்சியை வீழ்த்தி, பாரதிய ஜனதா கட்சி வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மே 8) கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. மாநிலத் தலைமையகத்தில் 207 வெற்றி பெற்ற வேட்பாளர்களையும் அமர வைக்க இடவசதி போதாது என்பதால், பெரிய அளவிலான ஒரு இடத்தைத் தேடும் பணியில் அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சட்டமன்றக் கட்சித் கூட்டத்தில், சுவேந்து அதிகாரி முறைப்படி சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவிக்கும் எளிய முறையில் இந்தத் தேர்தல் நடைபெறும் என்றும், மாநிலத் தலைவர் சாமிக்க பட்டாச்சார்யா சுவேந்து அதிகாரியின் பெயரை முன்மொழிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, சுவேந்து அதிகாரி மற்றும் மூத்த தலைவர்கள் ராஜ்பவனுக்குச் சென்று ஆட்சி அமைக்க உரிமை கோருவார்கள் எனத் தெரிகிறது.

புதிய அரசின் பதவியேற்பு விழா சனிக்கிழமை (மே 9) நடைபெற உள்ளதாக சாமிக்க பட்டாச்சார்யா உறுதி செய்துள்ளார். நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளான ரவீந்திர ஜெயந்தி அன்று இந்தப் பதவியேற்பு விழா நடைபெறுவது பெங்காலி மக்களிடையே ஒரு சென்டிமென்ட் மாற்றத்தை உருவாக்கும் என பாஜக கருதுகிறது. மேற்கு வங்கத்தில் முதன்முறையாக அமைய உள்ள பாஜக அரசின் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் பிற மாநில பாஜக முதல்வர்கள் எனப் பெரிய பட்டாளமே கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, பெங்காலில் பிறந்து, பெங்காலி மொழியில் கல்வி பயின்று, அந்த மொழியை சரளமாகப் பேசும் ஒரு 'மண்ணின் மைந்தன்' தான் முதல்வராக இருப்பார் என்று அமித் ஷா வாக்குறுதி அளித்திருந்தார். அந்தத் தகுதிகளுக்குச் சுவேந்து அதிகாரி கச்சிதமாகப் பொருந்துகிறார். மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராகப் பார்க்கப்படும் இவர், இந்தத் தேர்தலில் பாஜகவின் முகமாக முன்னிறுத்தப்பட்டார். குறிப்பாக, 2021-ல் நந்திகிராமில் மம்தாவை வீழ்த்திய இவர், இந்த 2026 தேர்தலில் மம்தாவின் கோட்டையான பவானிப்பூரிலேயே அவரைப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து 'ஜெயண்ட் கில்லர்' என்ற பெயரை மீண்டும் நிலைநாட்டியுள்ளார்.

2020-ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி, மம்தா அரசின் ஊழல்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார். ஒரு காலத்தில் மம்தாவின் வலதுகரமாக இருந்து, நந்திகிராம் போராட்டத்தின் மூலம் திரிணாமுல் ஆட்சிக்கு வர முக்கியக் காரணமாக இருந்தவர், இன்று அதே மம்தாவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல்வராகப் பதவியேற்கத் தயாராகி வருவது இந்திய அரசியலில் ஒரு மாபெரும் சுழற்சியாகப் பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com