
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 7 ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பிரபல நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனம் அதன் ஊழியர்களுக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் நிறுவன ஊழியர்கள் யாரேனும் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தால், அவரின் குடும்பத்திற்கு அந்த ஊழியர் ஓய்வு பெறும் வயதான 60 வரையில் அவரின் சம்பளம் முழுமையாக ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதோடு ஊழியர் குடும்பத்துக்கு தங்கும் வசதிகளும் ஏற்படுத்திதரப்படும் என்றும், ஊழியரின் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை பட்டம் பெறும் வரையில் நிர்வாகமே ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இந்தியா முழுக்க அதிகம் கவனம் பெற்று பல தரப்பில் இருந்தும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அனைத்து நிறுவனங்களும் இதுபோன்ற சலுகைகளை அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.