நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. பாராட்டித் தள்ளிய அமெரிக்கா!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதிகார சமநிலையைப் பேணுவதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது
Pete Hegseth about indian army
Published on
Updated on
1 min read

இந்தியா தற்போது மிகவும் வலிமையான நாடாக உருவெடுத்து வருவதாகவும், தனது ராணுவத்தை அதிநவீன வசதிகளுடன் மாற்றி அமைத்து வருவதாகவும் அமெரிக்காவின் போர் அமைச்சரான பீட் ஹெக்செத் பாராட்டியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற 'சாங்க்ரி-லா' மாநாட்டில் பேசிய அவர், இந்தியா தனது ராணுவ நடவடிக்கைகளை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றத் தேவையான கனரக தொழில்துறை மற்றும் தளவாடத் திறன்களைக் கட்டமைத்து வருவதைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதிகார சமநிலையைப் பேணுவதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் ராணுவத் திறனை மேம்படுத்த, அமெரிக்கா ஏற்கனவே இந்தியாவுடன் இணைந்து ஆயுதங்களை உற்பத்தி செய்யும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அமெரிக்கா தனது தற்காப்புத் தளவாடத் தயாரிப்பை உலகமயமாக்கி வருவதாகவும், அதில் இந்தியா முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர் கூறினார். ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியான் நாடுகளுடனான அமெரிக்காவின் தற்காப்பு உறவுகள் குறித்துப் பேசிய அவர், ஆசியா-பசிபிக் பிராந்தியமே உலகின் மிக முக்கியமான பகுதி என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான ஆட்சியில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மேம்பட்டுள்ளதாக ஹெக்செத் தெரிவித்தார். அதேநேரத்தில், சீனா உள்ளிட்ட எந்தவொரு நாடும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முடியாது என்று அவர் எச்சரித்தார். மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் நிலவும் உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது நீண்டகாலத் திட்டங்களில் உறுதியாக இருப்பதை அவர் வெளிப்படுத்தினார். 44 நாடுகளின் முக்கிய அதிகாரிகளைக் கொண்ட இந்த மாநாடு, சர்வதேச ராணுவ மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பில் புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com