
பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் குற்ற வழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால், 31 -ஆவது நாள் தானாகவே அவர்கள் பதவி இழக்க செய்யும் மசோதா ‘பதவி பறிப்பு மசோதா’ கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நாட்டின் பிரதமர் துவங்கி அமைச்சர்கள் வரை இந்த சட்டம் பொருந்தும் என்றாலும், எதிர்க்கட்சி தலைவர்களின் பதவியை பறித்து அவர்களை தன் வயப்படுத்தும் வேலை என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் இது ‘நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது’ என்று ஏற்கனவே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சூழலில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சட்டத்தை கொடுஞ்சட்டம் என விமர்சித்துள்ளார்,
இது குறித்து அவரது X -தளத்தில் கூறியிருப்பதாவது,
"130-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது சீரமைப்பு கிடையாது. இது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கருப்பு நாள். இது ஒரு கருப்பு சட்டம்! 30 நாளில் கைது = மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை எந்த விசாரணையும், நீதிமன்ற தீர்ப்பும் இல்லாமல் பதவிநீக்கம் செய்யலாம். இது பா.ஜ.க -வின் கட்டளை. இது ஜனநாயகமா?? வாக்குகளைத் திருடி, எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஒடுக்கி சர்வாதிகாரத்தை கைகொண்டுள்ளது பாஜக. எல்லா கொடுங்கோன்மையும் சர்வாதிகாரமும் இப்படித்தான் தொடங்கும்! மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் இத்தகைய திருத்தச் சட்டத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற முயலும் இந்த முயற்சிக்கு எதிராக ஜனநாயகச் சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.