

சோனம் வாங்சுக், லடாக்கின் பெயரை உலக அரங்கில் உயர்த்திய கல்வியாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். கல்வி என்பது புத்தக அறிவை மட்டுமே கற்பிப்பதாக இருக்கக் கூடாது என்றும் வாழ்க்கைக்குத் தேவையான திறன்களையும் வலுப்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருபவர். 1966-ஆம் ஆண்டு லடாக்கில் பிறந்த சோனம் வாங்சுக், சிறுவயதில் தாய்மொழியான லடாக்கிக்குப் பதிலாக தனக்குப் புரியாத மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டதால் பல சிரமங்களை எதிர்கொண்டார். தனது 9 வயது வரை பள்ளிக்கு செல்லாத சோனம் வாங்சுகிற்கு அவரது தாயே பாடம் கற்று கொடுத்து அறிவியல் உலகை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த அனுபவம்தான் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள் உருவாக்கியது.
பின்னர் ஸ்ரீநகரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்த அவர், 1988-ஆம் ஆண்டு SECMOL (Students' Educational and Cultural Movement of Ladakh) என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம், மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்களை மட்டுமல்லாமல், செய்முறை கற்றல், வாழ்க்கைத்திறன்கள், சுயசிந்தனை மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறன் போன்றவற்றை மையமாகக் கொண்ட கல்வி முறையை அறிமுகப்படுத்தினார். இந்த அமைப்பு லடாக்கின் கல்வி வரலாற்றையே மாற்றி அமைத்தது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெற முடியாமல் கைவிடப்பட்ட மாணவர்களை கரம்பிடித்து அவர்களுக்கென பிரத்தியோக பள்ளியை உருவாக்கி கல்வியின் உண்மையான சாராம்சத்தை உலகிற்கு காட்டினார்.
இதற்கிடையில், பருவநிலை மாற்றத்தால் லடாக்கில் விவசாயிகள் எதிர்கொண்ட கடுமையான தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில், 'பனி ஸ்தூபி' என்ற புதுமையான தொழில்நுட்பத்தை உருவாக்கினார். குளிர்காலத்தில் உறைய வைக்கப்படும் நீர், கோடை காலத்தில் மெதுவாக உருகி விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்கும் என்ற இவரின் கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றது. மேலும், சூரிய ஆற்றலால் இயங்கும் வெப்பக் கூடாரங்கள் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளையும் அவர் உருவாக்கியிருந்தாலும், அவற்றுக்கு காப்புரிமை பெறாமல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்த மூலமாக வெளியிட்டார்.
இவரின் சமூக பங்களிப்பிற்காகவும், சமூகம் சார்ந்த கல்வி சீர்திருத்தங்களுக்காகவும் ‘ரமோன் மக்சேசே விருது’ (2018), மற்றும் அவரது பனி ஸ்தூபி புத்தாக்கத்திற்காக ‘ரோலக்ஸ் தொழில் முனைவு விருது’ (2016) ஆகிய அங்கீகாரங்கள் வழங்கப்பட்டது. மேலும் கல்வி மற்றும் அறிவியல் துறையில் மட்டுமல்லாமல், லடாக்கின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் மற்றும் பழங்குடியின மக்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை வலியுறுத்தியும் சோனம் வாங்சுக் தொடர்ந்து அமைதியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். சமூக நலனுக்காக அறிவியலையும் கல்வியையும் இணைத்து செயல்படும் இந்தியாவின் முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவராக அவர் இன்று கருதப்படுகிறார்.
தற்போது இந்திய கல்வி முறையில் நிகழும் ஊழல்கள், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேட்டிற்கு எதிராகவும் மேலும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் 24 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள், பிரபலங்கள் மற்றும் கரப்பான் பூச்சி கட்சி இளைஞர்கள் களமிறங்கி உள்ளனர். தற்போது டெல்லி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு இளைஞர்கள் போராட்டத்தை கையில் எடுப்பதற்கு சோனம் வாங்சுக் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டமும் முக்கிய உந்து கோல் ஆகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.