

வியட்நாம் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் இந்தியர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் 32 பேர் உட்பட 36 பேர் பயணித்த படகு கடலில் மூழ்கி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
வியட்நாம் பூ குவாக் தீவு அருகே இந்திய சுற்றுலா பயணிகள் 32 பேர் மற்றும் 3 ஊழியர்களுடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதில் 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 15 இந்தியர்கள் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிலரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மீட்பு குழுவினர். இந்த படகு விபத்தில் தமிழர்களும் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஹனோயில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை +84 913089165 தொடர்புகொண்டு தகவல்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹான் மே ரட் தீவிலிருந்து ஆன் தோய் துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த அந்த வேகப் படகு, கரையிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழ்ந்தது. அப்பகுதியில் கடல் கொந்தளிப்பாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அதில் பயணித்த பல இந்திய சுற்றுலாப் பயணிகளை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளப்பட்டதாக வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கும், சம்பவம் குறித்த தகவல்களை வழங்குவதற்கும் ஹோ சி மின் நகரம் மற்றும் ஹனோய் ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தகவல் மற்றும் உதவி வழங்கும் பொருட்டு, ஹோ சி மின் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்றும், ஹனோயிலும் மற்றொரு கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. வியட்நாமின் மிகப்பெரிய தீவும், அதன் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பூ குவாக் தீவில், சமீப ஆண்டுகளில் பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்