
கொரோனா பரவல் எதிரொலியாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் காணொளி வாயிலாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பரவல் சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளதையடுத்து, இந்தியாவில் உருமாற்றம் அடைந்த பிஎஃப் 7 வகையிலான கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று உயர் மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதார கட்டமைப்புகள் மற்றும் கொரோனா தடுப்பு ஊசிகளின் நிலைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். மேலும் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனாவை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த நிலையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் காணொளி வாயிலாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று பிற்பகல் 3 மணிக்கு கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தினை நடத்தவுள்ளார்.